Infotainment
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Infotainment

Hi Folks, This forum is about Arts, Culture, Entertainment, G K, Music, Cinema, Tamil etc. etc., I dont want to restrict this forum for this alone, as the sky is the limit to discuss
 
HomeHome  PortalPortal  Latest imagesLatest images  SearchSearch  RegisterRegister  Log inLog in  

 

 பல்லவர் - விக்கிபீடியாவில் இருந்து

Go down 
AuthorMessage
Selva
Admin
Admin
Selva


Cancer Posts : 79
Join date : 2010-11-22
Age : 50
Location : Chennai, India

பல்லவர் - விக்கிபீடியாவில் இருந்து Empty
PostSubject: பல்லவர் - விக்கிபீடியாவில் இருந்து   பல்லவர் - விக்கிபீடியாவில் இருந்து EmptySun Dec 05, 2010 12:57 am

பல்லவர் ஏறத்தாழ 700 ஆண்டுகள் தென்னிந்தியாவில் நிலைத்து ஆட்சி புரிந்திருந்தும் - அவர்களைப் பற்றிய பல பட்டயங்களும் கல்வெட்டுக்களும் கிடைத்திருந்து - அவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்? என்பன போன்ற கேள்விகட்கு விடையளித்தல் எளிதன்று. அவர்களைப் பற்றிக் கிடைத்துள்ள மூலங்களைக்கொண்டு, பட்ட முறைமையை முற்றும் முறைப்படுத்தவும் முடியவில்லை.

பல்லவர் - விக்கிபீடியாவில் இருந்து 220px-Pallava_territories

Pallava kingdom c.645 CE during Narasimhavarman I

பல்லவர் - விக்கிபீடியாவில் இருந்து 220px-ShoreTemple

The Shore Temple at Mahabalipuram built by Narasimhavarman II

பலதிறப்பட்ட கூற்றுகள்

தமிழ் நாட்டில் கி.பி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் முதல் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ஏறத்தாழ 700 வருடங்கள் ஆட்சி புரிந்தனர். இவர்களது ஆட்சி தமிழகத்தின் வரலாற்றில் பல்வேறு அம்சங்களில் திருப்புமுனையாக அமைந்தது எனலாம். எனினும் இவர்களுடைய தோற்றம் பற்றி நம்பத்தகுந்த தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. இவர்கள் தமிழர்களே என ஒரு பிரிவினர் நிறுவ முயல, வேறு சிலர் இவர்கள், தமிழகத்துக்கு வெளியிலிருந்து வந்த தமிழரல்லாத இனத்தவர்கள் என்கின்றனர். இவர்கள் மூலத்தைத் தென்னிந்தியாவில் மட்டுமன்றிப் பாரசீகம், ஈழம் போன்ற பகுதிகளிலும் ஆய்வாளர்கள் தேடியுள்ளார்கள். முற்காலப் பல்லவர்கள் வெளியிட்ட சாசனங்களின் மொழி மற்றும் அவற்றின் உள்ளடக்கங்களை வைத்து, இவர்கள் இந்தியாவின் வடபகுதியிலிருந்து வந்த ஒரு பிராமணக்குடியினர் என்று சிலர் கருதுகிறார்கள். பிற்காலத்தில் அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பல்லவர்கள் தமிழ் மொழியின் பயன்பாட்டை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

இந்திய வரலாறு நூலாசிரியரான வின்ஸென்ட் ஸ்மித் என்பார், தமது 'பழைய இந்திய வரலாறு' என்னும் நூலின் முதற்பதிப்பில், 'பல்லவர் என்பவர் பஃலவர் என்னும் பாரசீக மரபினர்' என்றும், இரண்டாம் பதிப்பில் 'பல்லவர் என்பவர் தென் இந்தியாவிற்கே உரியவர். அவர் கோதாவரிக்கும் கிருஷ்ணைக்கும் இடைப்பட்ட வேங்கி நாட்டவராகலாம்' என்றும், மூன்றாம் பதிப்பில், பஃலவர் என்னும் சொல்லைப் பல்லவர் என்னும் சொல்லோடு ஒப்பிட்டுப் பார்த்து பாரசீகர் எனக் கூறல் தவறு. 'பல்லவர் என்பவர் தென் இந்தியரே ஆவர்' என்றும் முடிவு கூறியுள்ளார்.

ஆயின், ரைஸ் என்னும் ஆராய்ச்சியாளர், 'பஃலவர், மரபினரே பல்லவர்' என்று முடிவு செய்தனர். பேராசிரியர் துப்ராய் என்பவர், 'கி.பி. 150 இல் ருத்ர தாமன் என்னும் ஆந்திரப் பேரரசன் அமைச்சனான கவிராகன் என்பவன் பஃலவன். அவன் மரபினரே ஆந்திரப் பேரரசு அழிவுறுங்காலத்தில் அதன் தென்பகுதியை தமதாக்கி ஆண்டவராவர். பட்டயங்களில் காணப்படும் முதற் பல்லவ அரசர் அல்லர். ஆந்திர பேரரசின் தென் மேற்கு மாகாணங்களை ஆண்டு வந்த சூட்டுநாகர் பெண்ணை மணந்து பட்டம் பெற்றவனே முதற்பல்லவன். அவனே பல்லவர் பட்டயங்களில் கூறப்படுபவன்' என்று வரைந்துள்ளார்.

இங்ஙனம் பல்லவர் என்பர் பஃலவர் மரபினரே என்று முடிவு கொண்டவர் பலர். இலங்கையிற் சிறந்த ஆராய்ச்சியாளராக இருந்த இராசநாயகம் என்பவர். 'இலங்கையை அடுத்துள்ள மணிபல்லவம் (காரைத்தீவு) பல்லவர் பிறப்பிடமாகும். மணிமேகலையில் கூறப்பட்டுள்ள சோழனை மணந்த பீலிவனை என்பவர் நாகர் மகள் ஆவாள். அவன் பெற்ற மைந்தனே திரையால் கடத்தப்பட்டுக் கரை சேர்ந்த முதல் பல்லவன். அவன் தொண்டைக் கொடியால் உந்தப்பட்டு வந்தமையின் திரையன் என்றும் வழங்கப்பெற்றான். அவன் மரபினரே தம் தாயகம் தாங்கிப் (மணிபல்லவம்) பல்லவர் எனப்பட்டனர். பல்லவர் முதல் அரசன் பெரும்பாணாற்றுப் படையில் புகழ்பெற்ற தொண்டைமான் இளந்திரையன் ஆவன்' என விளக்கியுள்ளார்.

யாழ்பாணம் யாழ்பாண மக்களால் 'மணிபுரம்' எனப்படுகிறது. அங்கு நாகரும் இருந்தமையால் 'மணி நாகபுரம்' என்னும் பெயர் பெற்றது. இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வருபவர்க்கு யாழ்பாணம் ஒரு போது (போத்து - sprout)போலக்காணப்படுதலின், அது போது (போத்து) எனப்பட்டது. போது, போத்து, பல்லவம் என்பன ஒரே பொருளைக் குறிப்பன. யாழ்ப்பாணத்திலிருந்து போந்தவர் ஆதலின், தம்மைப் 'போத்தர்' என்றும், 'பல்லவர்' என்றும் பல்லவ அரசர் கூறிக்கொண்டனர். 'மணிபல்லவம்' என்னும் தீவு மணிமேகலையில் குறிக்கப்பட்டிருத்தல் காண்க. மணிமேகலை காலத்து மக்கட்கு விளங்கி இருத்தல் புலனாகும். பல்லவத்திலிருந்து வந்தவர் பல்லவர் என்று என்று தம்மைக்கூறிக் கொண்டமை இயல்பே அன்றோ?' 'வீரகூர்ச்சன் நாகர் மகளை மணந்து அரசு பெற்றான்' என்று பல்லவர் பட்டயம் கூறுதலும், கரிகாலன் நாகர் மகளை மணந்து பெற்ற இளந்திரையன் தொண்டை மண்டலம் ஆண்டான் என்பது ஆராய்ச்சிக்கு உரியன. மேலும், பல்லவர், இன்ன இடத்திலுருந்து தாம் வந்ததாக ஒரு பட்டயத்திலும் கூறிற்றில்லர் என்பது கவனிக்கத்தக்கது.

ஆராய்ச்சியாளராகிய எலியட் செவேல் முதலியோர் 'தொண்டைமண்டலத்துப் பழங்குடியினரான குறும்பர் மரபினரே பிற்காலப் பல்லவர்' என்றும் முடிவு செய்தனர். குறும்பர் ஆடுமாடுகளை மேய்ப்பவர். இதனைக் கருத்திற் கொண்டு. பால்-அவர் (பால் கறப்பவர் - குறும்பர்) என்பதே பல்லவர் எனத் திரிந்திருக்கலாம் என முடிவு செய்தவரும் சிலராவர்.

மணிமேகலையில் கூறப்படும் ஆதொண்டச்சக்கரவர்த்தி குறும்பரை வென்று அவர் தம் குறும்பர் பூமியைத் தனதாக்கி தன் பெயர் இட்டு தொண்டைமண்டலம் என வழங்கினான்' என்பது செவிவழி வரும் செய்தியாகும். இது முன்னரே கூறப்பட்டது.


பல்லவர் தமிழர் அல்லர்

வின்ஸெண்ட்ஸ்மித் தமது மூன்றாம் பதிப்பில் கூறியதே பெரிதும் பொருத்தமுடையதாகத் தெரிகின்றது. ஏனையோர் கருத்துகட்குக் கடுகளவும் சான்றில்லை. என்னை? பிராக்ருத மொழியில் வெளியிடப்பட்ட பல்லவ பட்டயங்களோ, அல்லது வடமொழியில் எழுதப்பெற்ற பல்லவர் பட்டயங்களோ, பிற கல்வெட்டுகளோ 'பல்லவர் பஹ்லவர் மரபினர்' என்றோ, வேற்று நாட்டவர் என்றோ. 'திரையர் மரபினர்' என்றோ, 'மணிபல்லவத் தீவினர்' என்றோ குறிக்கவில்லை சங்ககாலத்தில் தொண்டை மண்டலத்தை ஆண்ட இளங்கிள்ளி, இளந்திரையன் என்பார்க்கும் சிவஸ்கந்தவர்மன், 'புத்தவர்மன்' வீரகூர்சவர்மன் என்பார்க்கும் தொடர்பு ஏதும் இருந்திருத்தல் இயலாது என்பதைச் சிறிதளவு அறிவுடையாரும் தெளிவுறத் தெறிதல் கூடும் அன்றோ? மேலும் பல்லவர் பட்டயங்கள் அனைத்தும் பிராக்ருத மொழியிலும் பெரும்பாலான வடமொழியிலும் இருக்கின்றன. பல்லவர் சோழர் மரபினர் ஆயின் - இளந்திரையன் வழிவந்தவர் ஆயின் தமிழில் எழுதாது, தமிழ் மக்கட்கே புரியாத வடநாட்டு மொழிகளில் எழுதத் துணிந்திருப்பரோ? (46) கி.பி 9 ஆம் நூற்றாண்டிற்கும் பிற்பட்ட சோழரோ, பாண்டியரோ வளர்க்காத முறையில் தமிழைப் புறக்கணித்து, வடமொழியைத் தமது ஆட்சியில் வளர்த்திருப்பரோ? பல்லவர் காலத்தில் வடமொழி தொண்டை மண்டலத்தில் பேரரசு செலுத்தியது என்பது மிகையாகாது. பாரவி, தண்டி முதலிய வடமொழிப் புலவர் பல்லவர் ஆட்சியில் செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பது தெரிகிறதேயன்றி, எந்தத் தமிழ்ப் புலவரும் கி.பி. எட்டாம் நூற்றாண்டுவரை பல்லவர் ஆதரவு பெற்றதாகத் தெரியவில்லை. மேலும், பல்லவர், தம்மைப் 'பாரத்வாச கோத்திரத்தார்' என்று பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் கூறிக்கொள்கின்றனர்; குடிவழி அறிந்தவர்கள்; தமிழர்க்கு இருடிகள் கோத்திரம் எது? (47) இன்ன பிற காரணங்களால், பல்லவர் தமிழரின் வேறுபட்டவர் என்பதைத் தெளிவுறக் காணலாம்.

பல்லவர் பஹ்லவர் மரபினர்

பஹ்லவர்கள் முன்பு பார்த்தியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் தொண்டைமண்டலமாக இன்று அறியப்படும் ஆந்திர கடல் கரை பிரதேசம், காஞ்சி பிரதேசத்தில் தங்கி அங்கிருந்து தங்களது பல்லவ சாம்ராஜ்யத்தை நிறுவினர்

பஹ்லவ மன்னர்கள் தங்கள் சின்னமாக நெருப்பை கொண்டிருந்தார்கள். ஒரு பாத்திரத்தில் நெருப்பு எரிவதை தங்களது சின்னமாகவும் தங்களது சிற்பங்களிலும் வடித்து வைத்திருந்தனர். அதுவே பல்லவர்களும் செய்தது. பல்லவர்களது சின்னமாக இருந்ததும் நெருப்பு சட்டியே

தொண்டைநாடும் சங்கநூல்களும்

வடபெண்ணையாற்றைத் தென் எல்லையாகவும் சோணையாற்றை வடஎல்லையாகவும் அரபிக்கடலை மேற்கு எல்லையாகவும் கலிங்கத்தையும் வங்க மாகாணத்தையும் கிழக்கு எல்லையாகவும் கொண்ட ஆந்திரப் பெருநாடு கி.மு 184 முதல் கி.பி. 260 வரை செழிப்புற்று இருந்தது. வடபெண்ணை முதல் தென்பெண்ணை வரை இருந்த நிலப்பரப்பே அக்காலத் தொண்டைமண்டலம் எனப்பட்டது. அஃது அருவாநாடு, அருவாவடதலைநாடு என இரண்டு பிரிவுகளாக இருந்தது - முன்னதில் காஞ்சிநகரம் உட்பட்டது. பின்னது காஞ்சி முதல் வடபெண்ணை வரை இருந்த நாடாகும். இது குன்றுகளும் காடுகளும் சூழ்ந்த இடமாகும்; காளத்தி முதலிய மலையூர்களைத் தன்னகத்தே பெற்றது. அவ்விடம் இன்றும் 'தொண்டைமான் மாகணி' (மாகாணம்) எனப்படும். இரண்டு வெள்ளாறுகட்கு இடையில் உள்ள நிலமே சோழநாடு. தென்வெள்ளாற்றுக்குத் தென்பால் உள்ள இடமே பாண்டியநாடு. கொச்சி, திருவாங்கூர் நாடுகள் அடங்கிய இடமே பழைய சேரநாடாகும். குடகு முதலிய மலைநாட்டு இடங்களும் அவற்றைச் சார்ந்த கடற்கரையும் கொங்காணம் எனப்படும். அதனைச் சங்ககாலத்தில் நன்னன் என்பவன் ஆண்டு வந்தான்.

வடக்கே இருந்த அருவாவடதலை நாட்டில் திருப்பதியைத் தன் அகத்தே கொண்ட மலைநாட்டுப் பகுதியைத் திரையன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் தலைநகரம் 'பாவித்திரி' என்பது. அஃது இப்பொழுதைய கூடூர் தாலுக்காவில் உள்ள ரெட்டிபாளையம் என்னும் ஊராகும். இந்நிலப்பகுதி முன்னாளில் காகந்திநாடு எனப்பெயர் பெற்றது. காகந்தி என்பது புகாரின் மறுபெயர் ஆகும். சோழர் இப்பகுதியைக் கைக்கொண்டமையின், இதற்குக் காகந்தி நாடு (புகாருக்கு உரிமையான நாடு) என்று பெயரிட்டனர் போலும். 'கரிகாற்சோழன் காடு கெடுத்து நாடாக்கினான், விளை நிலங்களை ஆக்கினான். ஏரி குளங்களை வெட்டுவித்தான்; தொண்டை மண்டலத்தை நாடாக்கினான்; நாகரிகத்தைத் தோற்றுவித்தான்' என்று பட்டினப்பாலை முதலிய தமிழ் நூல்கள் கூறுகின்றன. இங்ஙனம் தொண்டை மண்டலம் சோழர் ஆட்சிக்கு வந்தது. முதல் சோழர் மரபினர் ஒருவர் தொண்டை மண்டலத்தை ஆண்ட செய்தி சங்கநூல்களில் காணக்கிடைக்கின்றது. 'திரையன்' அருவாவடதலை நாட்டை ஆண்டபோது, 'இளந்திரையன்' அருவா நாட்டை ஆண்டனன் என்பதும் அறியக்கிடக்கிறது. தொண்டைமான் இளந்திரையன் என்பவன் காஞ்சியை ஆண்ட தமிழ் அரசனாகப் பெரும்பாணாற்றுப்படையில் சிறப்பிக்கப்படுகிறான்.

தொண்டைமான் இளந்திரையன் காலத்தில் காளத்தி முதலிய மலைநாடுகளைச் சேர்ந்த காடுகளில் களவர் என்னும் வகுப்பினர் வாழ்ந்திருந்தனர். அவர்கட்குத் தலைவனாக இருந்தவன் புல்லி என்பவன். இவன் திரையனுக்கு அடங்கி இருந்தவனா அல்லது மாறுபட்டவனா என்பதை அறியக்கூடவில்லை. இந்த அளவே அகநானூறு முதலிய சங்க நூல்களால் நாம் அறியக்கிடக்கும் உண்மை ஆகும்.

இன்னும் தொடரும்

செல்வா
Back to top Go down
https://tamec.forumotion.com
Selva
Admin
Admin
Selva


Cancer Posts : 79
Join date : 2010-11-22
Age : 50
Location : Chennai, India

பல்லவர் - விக்கிபீடியாவில் இருந்து Empty
PostSubject: பல்லவர் - விக்கிபீடியாவில் இருந்து - பகுதி இரண்டு   பல்லவர் - விக்கிபீடியாவில் இருந்து EmptySun Dec 05, 2010 1:03 am

எல்லைப்போர்கள்

வடபெண்ணையாற்றுக்கு வடக்கே ஆதோணியைச் சுற்றி உள்ள நிலப்பரப்பு சாதவாகனர் (ஆந்திரர்) ஆட்சியின் தென்மேற்குப் பகுதியாக இருந்தது. அந்த இடம் 'சாதவாகனி இராட்டிரம்' என்று வழங்கப்பட்டது. சாதவாகனருடைய பெரும் இந்தப் பகுதிக்குத் தலைவனாக இருந்தான். அதே காலத்தில் சாதவாகனரது தென்பகுதியை மேற்பார்த்து வந்த தலைவர்களே பல்லவர் ஆவர். ஆதலின், இந்தப் பகுதி தமிழகத்தின் அருவாவடதலை நாட்டிற்கும் வடக்கின்கண்ணது ஆதலின், எல்லைப்போர்கள் பல நடந்தவண்ணம் இருந்தன. இப்போர்களைப் பற்றிய விவரங்கள் அறியமுடியாவிடினும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் தமிழ் அரசர்க்கும் 'ஆரியர்' என்று கருதப்பட்ட சாதவாகனர்க்கும் எல்லைப்புறச் சண்டைகள் நடைபெற்றன என்பதைச் சங்க நூல்களால் நன்கறியலாம். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்னும் பெயரும், திருக்கோவலூரை ஆண்ட மலையமான் ஆரியரை வென்றான் என வருவதும் 'சோழர் ஆரியரை வென்றனர்' (48) என்னும் குறிப்புகள் தமிழ் நூல்களில் பல இடங்களில் வருதலும் இவ்வெல்லைப் போர்களையே குறித்தனவாதல் வேண்டும். கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் (சிலப்பதிகார காலத்தில்) தோன்றி வளர்ந்து வந்த இந்த எல்லைப்புறப் போராட்டங்கள், ஆதோனியைச் சேர்ந்த நிலப்பகுதிக்குத் தலைவராக இருந்த சாதவாகன அதிகாரிகட்கும் தென்பகுதித் தலைவர்கட்கும் நாளடைவில் வெற்றியை அளித்தனவாதல் வேண்டும். இன்றேல், அக்கால வழக்கில் இருந்த சாதவாகனர் கையாண்ட 'கப்பல் நாணயங்கள்' வடபெண்ணை முதல் தென்பெண்ணை வரை காணக்கிடைத்தற்குத் தக்க காரணம் வேண்டுமன்றோ?

சாதவாகனப் பெருநாடு

சாதவாகனப் பெருநாடு பல மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தன. அவற்றைச் சாதவாகன மரபினரும் உயர்ந்த தானைத் தலைவரும் மண்டலத் தலைவராக இருந்து ஆண்டு வந்தனர்.

விஷ்ணு குண்டர்

கோதாவரிக்கு வடபாற்பட்ட பகுதியை, வாகாடகர் பெண்ணை மணந்த தலைவன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் மரபினர் விஷ்ணு குண்டர் எனப்பட்டனர். அவரது ஆட்சிக்காலம் கி.பி 450-550 எனலாம்.

சாலங்காயனர்

கோதாவரிக்கும் கிருஷ்ணைக்கும் இடைப்பட்ட வேங்கி நாட்டைச் சாலங்காயனர் என்பவர் கி.பி 320 முதல் 500 (50) வரை ஆண்டனர். அவர் தலைநகரம் வேங்கி (பெத்தவேங்கி) என்பது. அவர்கள் நந்தி வழிபாட்டினர். (சாலங்காயன நந்தி). அவருள் இரண்டாம் அரசனான அத்திவர்மனே (கி.பி. 345-370) சமுத்திரகுப்தனை எதிர்த்த அரசர் பலருள் ஒருவன் ஆவன். இறுதியில் இந்நாடு சாளுக்கியர் கைப்பட்டது.

இக்குவாகர் - பிருகத்பலாயனர்

கிருஷ்ணை, குண்டூர்க் கோட்டங்களை இக்குவாகர் (இக்ஷவாகர்) என்பவர் மாகாணத் தலைவராக இருந்து ஆண்டனர். இவருள் ஒருவனான சாந்தமூலன் என்பவன் கி.பி. 225இல் தன் ஆட்சி நிறுவி அந்நாட்டை ஆண்டான். இவன் மரபினர் சில ஆண்டுகளே அதனை ஆண்டனர். இறுதியில் அப்பகுதி ஏறத்தாழக் கி.பி. 275இல் பல்லவர் கைப்பட்டதாகலாம். அதன் தலைநகரம் 'தான்யகடகம்' என்பது. இந்நகரம் பல்லவர் வடபகுதிக்குத் தலைநகரமாகச் சிவஸ்கந்தவர்மன் பட்டயத்தில் காணப்படுகிறது.

ஆனந்தர்

குண்டூர், கிருஷ்ணைக் கோட்டங்களை இக்குவாகரிடமிருந்து ஆனந்தர் என்பவர் கைப்பற்றிக் கி.பி. 350 முதல் 450 வரை ஆண்டுவந்தனர். அப்பகுதி இறுதியிற் சாலங்காயனர் கைப்பட்டது.

பல்லவர்

சாதவாகனப் பேரரசில் கிருஷ்ணையாற்றுக்குத் தென்பாற்பட்ட நிலப்பகுதியே பல்லவர் ஆட்சியில் இருந்தது. பல்லவர் மரபினர் சாதவாகனர் மாகாணத் தலைவராக இருந்து ஆண்டு வந்தவர்; தம் பேரரசு வலி குன்றத் தொடங்கிய 225இல் தாம் ஆண்ட நாட்டைத் தமக்கே உரிமை செய்துகொண்டு விட்டனர்; பின்னர் வலுப்பெற்றதும், தொண்டை நாட்டைக் கைப்பற்ற முனைந்தனர்.

இங்ஙனம் சாதவாகனர் பேரரசில் மாகாணத் தலைவராக இருந்த சாலங்காயனர், விஷ்ணுகுண்டர், இக்குவாகர், பிருகத்பலாயனர், சூட்டுநாகர், பல்லவர் என்பவர், அப்பேரரசு வலிகுன்றத் தொடங்கியதும் தாம்தாம் ஆண்டுவந்த மாகாணத்திற்குத் தாமே அரசராகி விட்டனர்.

இதனாற்றான், (சாதவாகனப் பேரரசு சத்ரபர், வாகாடகர் என்ற புதியமரபினர் படையெடுப்பால் நிலைதளர்ந்தபோது, தம் ஆட்சியை உண்டாக்கிக்கொண்ட) இந்த அரசருள் பலர், கி.பி. 340இல் தெற்கு நோக்கிப் படையெடுத்த சமுத்திரகுப்தனை எதிர்த்தனர் என்பதை அலகாபாத் தூண்கல்வெட்டு உணர்த்துகிறது. சாதவாகனப் பேரரசு உடைபட்டுச் சிறிய பல நாடுகள் தோன்றியிராவிடின், சமுத்திரகுப்தனை இத்துணை அரசர் (இவருள் காஞ்சியை ஆண்ட விஷ்ணுகோபன் ஒருவன்) கோதாவரி, கிருஷ்ணை ஆறுகளண்டை எதிர்த்திருத்தல் இயலாதன்றோ?

பல்லவரும் தொண்டைநாடும்

இந்நிலைமை உண்டாதற்கு முன்னரே, இந்தப் பல்லவ மரபினர் (மாகாணத் தலைவர்) தங்கள் தென் எல்லைப்புறம் போர்களிற் சிறிது சிறிதாக வெற்றி பெற்று வந்தனர்.

இறுதியில் சோழர் பிடித்தாண்ட தொண்டை மண்டலத்தில் வலிமையுள்ள அரசன் இல்லாத அக்காலத்தில் பெரும்படையை அனுப்பிப் பகைவரை விரட்டியடிக்க வலியற்சோழன் சோழமண்டலத்தை ஆண்ட அக்காலத்தில் (வட எல்லையில் இருந்த) சாதவாகனப் பேரரசின் தென்பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் பையப்பைய அருவா வடதலை நாட்டையும் பிறகு அருவாநாட்டையும் கைப்பற்றினர்.

'தொண்டைமான் சக்கரவர்த்திக்கும் விசுவாவசுராசனுக்கும் போர் நடந்தது' என்னும் செவிமரபுச் செய்தி ஒன்று கர்னெல் மக்கென்சி எழுதியுள்ள குறிப்புகளில் காணப்படுகிறது. விசுவாவசுரனே தொண்டை மண்டலத்தை வென்ற முதல் பல்லவனோ என்பது விளங்கவில்லை. எனினும், இச்செய்தி பல்லவரது தொண்டை மண்டலப் படையெடுப்பைக் குறிப்பதென்பதில் ஐயமில்லை.

இங்ஙனம் கைப்பற்றிய நாட்டில், மக்களை இன்புறச் செய்யவும் நாட்டில் அமைதியை உண்டாக்கவும் பப்பதேவன் (55) என்னும் அரசன் ஓர் இலக்கம் கலப்பைகளையும் பிறவற்றையும் தந்தான் என்று செப்பேடு கூறுகின்றது, பின்வந்த அரசரும் புதிய நாட்டில் இருந்த கோவில்களுக்கு மானியங்கள் விட்டனர் என்னும் செய்தி செப்பேடுகளில் காணப்படுகிறது. இச்செப்பேடுகளில் பிராக்ருத மொழியே காணப்படுகிறது, சாதவாகனப்பேரரசர் ஆட்சியின் தொடக்கத்தில் காணப்பட்ட செப்பேடுகளில் உள்ள பிராக்ருத மொழியிலேயே இப்பட்டயங்களும் காணப்படுகின்றன. (56) எனவே, இதுகாறும் கூறியவற்றால், சாதவாகனர் பேரரசில் தென்மாகாணத் தலைவராக இருந்தவரும் அவர் மரபினரும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அருவாவடதலை நாட்டை முதற்கண் கைப்பற்றி, உழவு, நாகரிகம் முதலியவற்றை நுழைத்தனர். பிறகு சோழவேந்தர் வலியற்ற நிலையைக் கண்டதும், அருவா நாட்டையும் கைப்பற்றினர்; சோழர் காலத்துத் தலைநகரமாக இருந்த கல்விக்கும் பல சமயங்கட்கும் நிலைக்களமாக இருந்த காஞ்சியைத் தங்கள் கோநகரமாக ஆக்கிக் கொண்டனர் என்பன நன்கு விளங்குதல் கூடும் அன்றோ? இவர்களே தங்களைப் பல்லவர் என்று கூறிக்கொண்டனர்.

பல்லவர் அரச மரபினரே

இவர்கள் தம்மைப் 'பரத்வாச கோத்திரத்தார்' எனக் கூறுதல் கட்டுக்கதை. இவர்கள் சிறந்த சத்திரியரே. கதம்பமயூர சன்மன் இவர்களைப் 'பல்லவ சத்திரியர்' என்று கூறியதாகத் தாளகுண்டாக் கல்வெட்டு கூறுகிறது. எனவே, பல்லவர் சத்திரியர் ஆவர். அவர்கள் வாகாடகர், சாலங்காயனர் முதலிய பிற அரச மரபினரோடு தொடர்பு கொண்டனர். ஆயின், தமிழ்வேந்தர் ஆர், வேம்பு, பனை இவற்றைத் தம் மரபுக்கு அடையாளமாகக் கொண்டவாறே ஆந்திர நாட்டிலிருந்து வந்த பல்லவரும் தமிழ் முறை பற்றித் தம்மைப் (பல்லவக்கொடி - தொண்டைக்கொடி பற்றிப்) பல்லவர் என அழைத்துக் கொண்டனர் ஆவர்.

பல்லவர்கள் வெளியிட்ட சாசனங்களின் மொழியின் அடிப்படையில், பல்லவர் காலத்தை மூன்று பிரிவாகச் சில ஆய்வாளர் இனங்கண்டுள்ளனர்.

* 1. முற்காலப் பல்லவர் காலம்
* 2. இடைக்காலப் பல்லவர் காலம்
* 3. பிற்காலப் பல்லவர் காலம்

பிற்காலப் பல்லவர்கள் காலத்திலேயே தமிழ் நாட்டில் இந்து சமய மறுமலர்ச்சியும், சிற்பம், ஓவியம், கட்டிடக்கலை முதலிய கலை வளர்ச்சியும் உச்ச நிலையடைந்தன. முதலாம் மகேந்திரவர்ம பல்லவனுடன் துவங்கிய பிற்காலப் பல்லவ மன்னர் வரிசையிலே, மாமல்லன் எனப்பட்ட முதலாம் நரசிம்ம பல்லவன், இராஜசிம்மன் எனப்பட்ட இரண்டாம் நரசிம்மன், நந்திவர்மன் என்பவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர்.

அறியப்பட்ட சில பல்லவ அரசர்கள்

முற்காலம்

* சிவக்கந்தவர்மன்

இடைக்காலம்

* குமாரவிஷ்ணு
* கந்தவர்மன்
* வீரவர்மன்
* கந்தவர்மன்-II
* சிம்மவர்மன்
* சிம்மவிஷ்ணு
* மகேந்திரவர்மன்
* நரசிம்மன்-I
* மகேந்திரன்-II
* பரமேஸ்வரவர்மன்-I
* நரசிம்மன்-II

பிற்காலம்

* நந்திவர்மன்-II
* தண்டிவர்மன்
* நந்திவர்மன்-III
* நிருபத்துங்கன்
* அபராஜிதன்

சமூக, பொருளாதார அமைப்பு
'பல்லவர் ஆட்சிக் காலத்தில், பிராமணர்களும் விவசாயிகளும் பரஸ்பர நன்மையை அடிப்படையாகக் கொண்ட, இறுக்கமான சார்புறவுகளை உண்டாக்கிக் கொண்டனர். சோழர் ஆட்சிக் காலத்தில் இந்த நல்லுறவு அதன் வளர்ச்சிக்கான சாத்தியப்பாடு பூரணத்துவம் பெறுமளவுக்குப் பூத்துப் பொலிந்தது........... இந்த உள்ளூர் விவசாயத் தலைவர்கள் சமூக மேன்மையையும் முதன்மையையும் அநுபவித்தனர். அத்துடன் பிராமணியக் கல்வியுடனும் சடங்குகளுடனும் இத்தலைவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு ஊடாட்டமிருந்தது. அந்த ஊடாட்டம் காரணமாக அந்தப் பிராமணியப் பண்பாட்டின் பெரும் பகுதியினை இவர்கள் தமது பொது வாழ்க்கை நடத்தைகளிலும், வீட்டு நடத்தைகளிலும் ஏற்றுத் தழுவிக் கொண்டனர். இந்த நடத்தை நடைமுறைகள், இவர்களை, அந்த உள்ளூர்ச் சமூகத்தின் குறைந்த அந்தஸ்துள்ள குழுக்கலிருந்து பிரித்து வைத்தது. பிராமணர்களைப் போன்று மேலாதிக்கமுடையதாகவிருந்த இந்த விவசாயக் குழுக்கள், தமிழ்க் கல்விப் பாரம்பரியம் ஒன்றினைப் பேணிக் கொண்டன. பெரிய புராண ஆசிரியரான சேக்கிழா‘ இக்காலத்திற் பெரும் புலவர்களாகவிருந்த வெள்ளாளருக்கான நல்லுதாரணமாகத் திகழ்கின்றார். இந்த உள்ளூர் விவசாயக் குழுக்களுட் சிலர், பிராமணர்களைப் போன்றே, வடமொழியறிவிலும் மிக உயர்ந்த பாண்டித்தியம் பெற்றிருந்தனர். இது, பதின்மூன்றாம் நூற்றாண்டின் சைவ சித்தாந்த இயக்கம் மூலம் தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது'.

- செல்வா
Back to top Go down
https://tamec.forumotion.com
 
பல்லவர் - விக்கிபீடியாவில் இருந்து
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» சேரர் - விக்கிபீடியாவில் இருந்து.
» சோழர் கலை - கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
» பாண்டியர் - கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

Permissions in this forum:You cannot reply to topics in this forum
Infotainment :: Your first forum-
Jump to: