Infotainment
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Infotainment

Hi Folks, This forum is about Arts, Culture, Entertainment, G K, Music, Cinema, Tamil etc. etc., I dont want to restrict this forum for this alone, as the sky is the limit to discuss
 
HomeHome  PortalPortal  Latest imagesLatest images  SearchSearch  RegisterRegister  Log inLog in  

 

 காந்தி - தீண்டாமையின் நவீன வடிவம்

Go down 
2 posters
AuthorMessage
Jammy
Newbee
Jammy


Virgo Posts : 16
Join date : 2010-11-28
Age : 33
Location : Chennai

காந்தி - தீண்டாமையின் நவீன வடிவம் Empty
PostSubject: காந்தி - தீண்டாமையின் நவீன வடிவம்   காந்தி - தீண்டாமையின் நவீன வடிவம் EmptySun Nov 28, 2010 10:29 pm

"மகாத்மா காந்தி" என்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எனக்குள் பிரவேசிக்கத் தொடங்கியது, அநேகமாக எனது 5 ஆவது வயதில் எனக்கணக்கிட்டுப் பார்க்கிறேன். அது என் தொடக்க கல்விக்காகப் பள்ளிக்குச் சென்ற வயது. நகராட்சிப் பள்ளியாக இருந்தபோதும், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை காலை காந்தியின் பஜனைப் பாடல்களைப் பாட வேண்டும். ஒரு மணி அடிப்பார்கள், 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் தரையில் சப்பணமிட்டு அமர்ந்தபடி, இரண்டு கைகளையும் கும்பிட்டபடி, தலை தரையைத் தொடும்படி உட்கார்ந்து கொண்டு, "ரகுபதி ராகவ ராஜாராம்" தொடங்கி, ஏறத்தாழ அரைமணி நேரத்திற்கு காந்தியின் பாடல்களைப் பாடுவோம். நான் படித்த நகராட்சிப் பள்ளி இருந்த பகுதியும் காந்தி நகர். தலைமை ஆசிரியரின் நாற்காலிக்குப் பின்புறச் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் படத்திற்குரியவராகவும், பஜனை செய்வதற்குரியவராகவும், பாடப் புத்தகங்களில் படிப்பதற்குரியவராகவும், சுதந்திர நாள், குடியரசு நாள், அவர் பிறந்த நாள் போன்ற நாட்களில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன் மைதானத்தில் நடக்கும் இறைவணக்கக் கூட்டமாக இருந்தாலும், அனைத்திலும் பேசப்பட்ட, பேச வைக்கப்பட்ட ஒருவர் காந்திதான். பிறகுதான் நேரு மாமா!

காந்தி தாத்தாவாகவும், நேரு மாமாவாகவும் என்னுள் கருத்துருவாக்கப்பட்டதுதான் இதற்கான மூலகாரணமாக இருக்க வேண்டும். ஏனெனில், இந்த பாதிப்புகள் எனக்குள் மட்டும் அல்ல. ஏறத்தாழ என் வயது, அதற்கு மேலும் உள்ள வயதினருக்கும் கூட இதுதான் நிலைமை. இது, உள்வாங்கிக் கொள்ளப்பட்டது அல்ல, உள்ளே திணிக்கப்பட்டது. இன்றைக்கும் கூட, இதுதான் இந்தியத் திணிப்பாக இருக்கிறது. இந்தியாவில் வேறு எந்தத் தலைவரையும் இந்த அளவிற்கு திட்டமிட்டுத் திணிக்கவில்லை!

1960களில் தொடங்கி 1974 வரை, தொடக்கக் கல்வி முதல் மருத்துவக் கல்லூரி மாணவனான பிறகும் கூட, பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் என்ற ஒருவர் என்னுள் வரவேயில்லை. ஏப்ரல் 14, 1975ஆம் ஆண்டு சகோதரர் கே.ஆர்.எம். ஆதிதிராவிடர் அவர்கள் என்னையும், டாக்டர் ஜெயவேல் அவர்களையும் அழைத்துக் கொண்டு, சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்திற்கு வெளியே நின்ற அம்பேத்கர் சிலைக்கு மாலையணிவிக்கச் செய்தார். இடஒதுக்கீட்டில் இடம்பெற்று, சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கத் தொடங்குவதற்கு முன்பு வரை, எத்தனையோ முறை விண்ணப்பப் படிவங்களில் 18 சதவிகித இடஒதுக்கீட்டில் இடம்பெற விண்ணப்பித்திருக்கிறேன். இடம் பெற்றேன். ஆனால் அதுவரை கூட, இந்த இடஒதுக்கீடு கிடைக்க, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இதற்கான சட்டத்தை எனக்கும், என் சமூகத்திற்கும் பெற்றுக் கொடுத்த இந்த மாபெரும் புரட்சியாளரைப் பற்றி அறியாதிருந்தேன். என்னைப் போலவே, அன்றும் இன்றும் கோடிக்கணக்கான தலித்துகள் இருக்கிறார்கள்.

டாக்டர் அம்பேத்கர், ஜோதிபா புலே, அயோத்தி தாசப் பண்டிதர், தாத்தா ரெட்டமலை சீனிவாசன் போன்றவர்களின் நூல்களைப் படித்த போதும், சுபாஷ் சந்திர போஸ், பகத்சிங், உத்தம் சிங் மற்றும் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறுகளாலும், தந்தை பெரியார் காந்தியுடன் முரண்படும் இடங்களாலும், காந்தி மீது நான் அன்று கொண்டிருந்த எண்ணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சரியத் தொடங்கின. ஜவகர்லால் நேரு, எம்.ஓ.மத்தாய் மற்றும் ***** எழுதிய லேப்பியர் மற்றும் காலின்ஸ் போன்றவர்களின் கருத்துகளும் மாறுபட்டிருந்தன.

1934 இல் வியன்னாவில் இருந்து, சுபாஷ் சந்திரபோஸ் எழுதி இந்தியாவில் தடை செய்யப்பட்ட நூலான "இந்தியப் போர்" என்ற நூலைப் படித்தபோதுதான், காந்தியின் சுதந்திரப் போராட்டமே கேள்விக்குரியதாக இருந்தது. காந்தியைப் பற்றி குறிப்பிடும்போது, "இந்தியர்களை ஈர்க்கும் ஓர் அபூர்வ சக்தி காந்தியிடமிருக்கிறது. பிறிதொரு நாட்டில் அவர் பிறந்திருந்தால், அந்நாட்டில் அவர் முற்றுந் தகுதியற்றவராகவே இருந்திருப்பார். அங்கு அவரது சாத்வீகம், அவருக்கு ஆபத்துண்டாக்கியிருக்கும் அல்லது பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பியிருக்கும். ஆனால், அது இந்தியாவில் வேறுவிதம்..." ("இந்தியப் போர்", பக்கம்: 169).

இறந்து 59 ஆண்டுகள் முடிந்த பிறகும் கூட, எதற்காக அவர் விவாதிக்கப்பட வேண்டும்? ஒரு சிறு பிரிவு மக்களைத் தவிர, இந்தியாவின் அனைத்துப் பிரிவு மக்களும் காந்தி என்ற பெயரை புனிதமானதாக எண்ணிப் போற்றிக் கொண்டிருக்கின்றனர்.

அண்மையில் "தீராநதி" இதழில் (ஆகஸ்ட் 2009) வந்த ஒரு செய்தி என்னை அதிர வைத்ததும் கூட, இந்த வெளீயிட்டைக் கொண்டு வரக் காரணமாயிருந்தது. அதாவது, "யுனெஸ்கோ" நிறுவனம், 1947 இல் வெளியிட்டிருக்கும் "கல்வி குறித்த சிந்தனையாளர்கள்" புத்தகத் தொகுப்பில், உலகின் பெரும் புகழ்பெற்ற சிறந்த கல்வியாளர்கள் நூறு பேருடைய அர்ப்பணிப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் கன்பூசியஸ், கிரேக்கத்தின் பிளாட்டோ, ஆஸ்திரியாவின் பிராய்டு, இத்தாலியின் கிராம்ஸி போன்றவர்களோடு இந்தியாவின் பிரதிநிதியாக இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருப்பவர்கள், காந்தி, தாகூர், அரபிந்தர், ஜே.கிருஷ்ணமூர்த்தி மற்றும் டாக்டர் மால்கம் ஆதிசேஷையா.

டாக்டர் மால்கம் ஆதி சேஷையா, தாகூர் தவிர மற்ற மூவருக்கும் கல்விக்கும் என்ன தொடர்பு? மற்ற மூவரும் ஆன்மிகவாதிகள். பிளாட்டோ, பிராய்டு வரிசையில் வருமளவிற்கு காந்தி கல்வியாளரா? இந்தியாவில் கல்வியாளர்களுக்கு இவ்வளவு கடும் வறட்சியா? அல்லது கன்பூசியஸ், கிராம்ஸி அளவிற்கு காந்தி கல்விச் சிந்தனையாளரா?

ஆதிக்க சாதியினரைத் தவிர, மற்ற தீண்டத்தகாதவர்கள் (அன்று 6 கோடி) கல்வி கற்பதற்குத் தடையாயிருந்த தத்துவம் வர்ணம். வர்ணம்தான் அனைத்து இழிவுகளுக்கும், வன்கொடுமைக்கும் காரணமாயிருந்தது. இருக்கிறது. வர்ணம் ஒழியாத வரை தீண்டாமை ஒழியாது. அந்த வர்ணம் குறித்த காந்தியின் செயல்திட்டம் என்ன? வர்ணத்தை ஒழித்து, அனைவருக்கும் கல்வி கிடைக்க காந்தி என்ன செய்தார்? சிறீமான் காந்தி வர்ணத்தைப் போற்றிப் பாதுகாக்கிறார். எப்படி? "வர்ணம் விதித்ததுதான் நியதி. அது மாற்றமில்லாதது. வர்ண விதியை நாம் பின்பற்றி நடக்காததுதான், பொருளாதார அழிவுக்குக் காரணமாக உள்ளது. மக்களின் வேலையில்லா திண்டாட்டத்திற்கும் வறுமைக்கும் அது காரணமாயிருக்கிறது" என்று எச்சரிக்கிறார்.

வர்ணம் ஒரு மனிதருக்கு - என்ன தொழிலை விதித்துள்ளதோ அந்தத் தொழிலைத்தான் அவர் எடுத்துக் கொள்ள வேண்டும். நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு மரத் தச்சரின் மகன், தான் ஒரு வக்கீலாக வேண்டும் என்று ஒருபோதும் விரும்பியதில்லை. ஆனால், இன்று ஒரு தச்சனின் மகன் வக்கீலாக வேண்டும் என்று விரும்புகிறார். ஏனெனில் பணம் திருடுவதற்கு, அந்தத் தொழில்தான் மிக எளிதான வழி என்பதை அவர் அறிந்து கொண்டிருக்கிறார் (மகாத்மா காந்தி நூல்கள் தொகுப்பு - 7, பக்கம் 89, 90, 91).

மருத்துவனாக மாற விரும்பினால், அவனைத் திருடன் என்கிறார்! பொருளாதாரத்தில் பின் தங்கிய ஒரு தேசத்தைக் கல்வி தானே சீர்படுத்தும். லெனின் ஆட்சியதிகாரத்திற்கு வந்தபோது, சோவியத் ரஷ்யாவில் படித்தவர்கள் எண்ணிக்கை 2 சதவிகிதம். தோழர் அந்தன் மொகரங்கோவிடம், கல்வி பயிற்றுவிக்கும் பொறுப்பினைக் கொடுத்தபோது, லெனின் கேட்டுக்கொண்டது ஒன்றே ஒன்றுதான். "ரஷ்யாவில் உள்ள மக்கள் நூறு சதவிகிதம் கல்வி கற்றவர்களாக மாற்றப்பட வேண்டும்" என்பதுதான். பத்தே ஆண்டுகளில் 2 சதவிகிதமாக இருந்த படித்தவர்களின் எண்ணிக்கையை 98 சதவிகிதமாக மாற்றிக் காண்பித்தாரே! லெனின் கல்வியாளர். ஆனால் காந்தியோ குலத் தொழிலை விட்டுவிட்டால் பொருளாதாரம் சீர்குலைந்துவிடும் என்கிறார்!

இவரைப் போய் உலகில் தோன்றிய கல்வியாளர்கள் பட்டியலில் இடம்பெயரச் செய்துள்ளனரே! ராஜாகோபாலாச்சாரியின் குலக்கல்வித் திட்டத்திற்கு காந்திதான் குரு. குலக் கல்வித் திட்டம்தான் இந்தியாவை சமூக, பொருளாதார அழிவிலிருந்து காப்பாற்றும் என்றும் கூறுபவர் கல்விமானா? காந்தியின் "அரசியல்" பற்றிய விமர்சனங்கள், அவர் அரசியல் நடத்திக் கொண்டிருந்த காலத்திலேயே, பகத்சிங் மரணத்தில் "வஞ்சக நாடகமாடியது" தொடர்பாக வந்த விமர்சனங்களே இன்று வரைக்கும் ஆவணமாக உள்ளது. அதற்குள் போகத் தேவையில்லை.

பொருளாதாரம் குறித்த அவரது பார்வையில், அவர் காலத்தில் வாழ்ந்த 35 கோடி இந்தியர்களுக்குமான எந்த செயல்திட்டமும் இல்லை. 35 கோடி 110 கோடியாக உயர்ந்தால் என்ன செய்ய வேண்டும் என்று கூறுமளவிற்கு, அவரிடம் பொருளாதார ஞானமும், பொருளாதாரம் குறித்த அடிப்படைச் சிந்தனையும் இல்லை. தொலை நோக்கு அறிவும் இல்லை. அடுத்ததாக "இந்தியாவின் தொழு நோயான" தீண்டாமையைப் போக்குவதற்குப் பதிலாக, சாதியக் கொடுங்கோன்மையைத் தூக்கிப் பிடித்த காந்தியின் கோர முகத்திரையை அம்பேத்கர் - "காந்தியும், காங்கிரசும் தீண்டத்தகாத மக்களுக்குச் செய்தது என்ன?" என்ற நூலில் கிழித்துக் காண்பித்துள்ளார்.

இன்னமும் கூட, இந்தியாவில் தலித் மக்கள் வாழ்கின்ற பெரும்பான்மைக் குடியிருப்புப் பகுதிகளுக்குப் பெயர் "காந்தி நகர்!" இது அவமானப் பெயர் அல்லவா? எம் மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு எழுப்பப்பட்ட பெயரல்லவா? டாக்டர் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் கூட, பார்ப்பனியத்திற்கு அவர்கள் மாபெரும் அச்சுறுத்தலாக இருப்பதைப் போலவே, தீண்டத்தகாத மக்களாக்கப்பட்ட தலித்துகளுக்கு, காந்தியின் தலித் விரோத, நால்வர்ணச் சிந்தனைகள் இன்னும் கூட ஓர் அச்சுறுத்தலாகவே இருந்து வருகின்றன.

"என் அபிப்ராயத்தில் பரம்பரையாய் அல்லது சுயமாய் அடைந்த உயர்நிலை என்பதே இல்லை. எல்லோரும் பிறக்கையில் சமமாகவே பிறக்கின்றனர். பிறப்பினாலேயே பின் அடைந்த ஞானத்தினாலோ பிராமணர் தங்களை மேல்சாதியார் என அழைத்துக் கொள்ளும் இடங்களிலெல்லாம் நான் அவர்களை எதிர்த்திருக்கிறேன். இன்னொரு மனிதனை விடத் தான் உயர்ந்தவனாகக் கருதுவது மனிதத்தன்மையற்ற செயல் என்பது என் கருத்து... ஆகையால் பிராமணனிடமோ, வேறு எவரிடமோ இந்த உயர்சாதிப் பேய் தலைகாட்டுவதை பிராமணன் அல்லாதான் எதிர்க்கையில் அவனுக்கு நான் உறுதுணையாய் நிற்கிறேன். உயர்ந்தவனென்று தன்னை கருதுவோன், தான் மனிதனாய்க் கருதப்படுவதற்குள்ள உரிமையை இழந்து விடுகிறான் என்பது என் அபிப்ராயம்" ("யங் இந்தியா" 29.9.1927).

லோகமான்ய திலகரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள 1.8.1920 அன்று காந்தி அங்கு சென்றார். திலகரின் பாடையைத் தூக்குவதற்கு தோள் கொடுக்க காந்தி சென்றபோது, அங்கிருந்த பார்ப்பனர்கள், "நீ வைசியன், இந்தப் பாடையைத் தொடக்கூடாது" எனக் கூறி அவரைப் பிடித்துக் கீழே தள்ளினார்கள். (தனஞ்செய் கீர் எழுதிய "லோகமான்ய திலகர்" - ஆங்கில நூல் பக்கம். 442). நால் வர்ணக் கட்டமைப்பில் மூன்றாவது இடத்தில் இருப்பவர்க்கே இதுதான் மரியாதை! பிணத்தைத் தொடுவதற்குக் கூட அருகதையற்றவராகத்தான் காந்தி பார்ப்பனர்கள் கண்களுக்குப் பட்டாரே தவிர, இந்திய தேசத்தின் விடுதலையை முன்னிறுத்துபவராகத் தெரியவில்லை. இதுதான் இந்து மதம். இதற்குப் பிறகும்கூட "வர்ணத்திற்கு" இவர் பொழிப்புரை எழுதுவது, இந்து மதம் பற்றிய அடிப்படை அறிவு அறவே கிடையாது என்பதைத் தவிர வேறு ஏதும் இல்லை!

"தீண்டாமை, இரக்கமற்ற செயல்" என்பதைச் சொல்ல "மகாத்மா" தேவையில்லை. ஒன்றாம் வகுப்பு படிக்கும் என் தெருக்குழந்தை கூட, தீண்டாமையின் கொடுமையைப் பார்த்துக் காறித் துப்பும். இவர் என்ன இரக்கப்படுவது? இவரின் இரக்கம், வெண்மணியில் வெந்த எம் குழந்தைகளின் மயிருக்குக் கூட உதவாது. தீண்டாமையின் இழிவினை, அவமானத்தை 24 மணிநேரமும் நேருக்கு நேர் எதிர் கொள்பவனுக்குதான் அதன் வேதனை என்னவென்று உணர முடியும்!

அடுத்ததாக இவர் சொல்கிறார்: "உயர் சாதிப் பேய் தலைகாட்டுவதை பிராமணன் அல்லாதவன் எதிர்க்கையில், அவனுக்கு நான் உறுதுணையாய் நிற்கிறேன்...." தெற்கே, மாபெரும் இயக்கப் போராளி தந்தை பெரியார் பார்ப்பனர்களை நேருக்கு நேர் எதிர்த்தபோது, இவரும் இவரோடு குல்லாப் போட்டுக் கொண்டிருந்த கூட்டமும் எத்தனை முறை பெரியாரோடு இணைந்து, பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தனர் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? அல்லது பெரியாரைப் பற்றியும் அவருடைய இயக்கம் தமிழ் நாட்டில் நடத்திய போராட்டங்களும் இவருக்குத் தெரியாமல் போய்விட்டதா?

டாக்டர் அம்பேத்கரோடு இவரும், இவரது காங்கிரஸ் கூடாரமும் எத்தனை பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்களை நடத்தின? அப்போதெல்லாம் இவர் எங்கே போயிருந்தார்? எத்தனைப் போராட்டங்களை இவரே முன்நின்று நடத்தினார்? இதற்கு ஏதேனும் ஆதாரப்பூர்வமான சான்றுகள் உண்டா? ஒரு "மகாத்மா" பேசியதற்கும் அது செயல்பட்டதற்கும், ஏதேனும் தொடர்பு உண்டா?

அன்றைய தேதியில் 35 கோடி மக்கள் தொகையும், மிகப்பெரிய நிலப்பரப்பும் கொண்ட தேசம் அன்னியராட்சியில் சுரண்டப்பட்டு வந்த காலத்தில் (அவர்கள் சுரண்டுவதற்காகவே, பல திட்டங்கள் தீட்டினாலும்) மக்களின் அடிப்படைத் தேவையான போக்குவரத்திற்கு ரயில்களும், ஆரோக்கியத்திற்கு மருத்துவமனைகளையும் கட்டி வந்ததையும் இந்த தேசத்திற்குச் சுதந்திரம் வேண்டும் என்று தலைமையேற்று நடத்திவந்த "சுதந்திரப் போராட்ட வீரர்" கூறுகிறார்...

"ரயில்வேக்களும், ஆஸ்பத்திரிகளும் இயல்பாக அழிவதை நான் நிச்சயம் வரவேற்பேன் என்றாலும், அவற்றை நாசம் செய்ய வேண்டும் என்பது என் நோக்கமல்ல. உயர்ந்த பரிசுத்தமான ஒரு நாகரிகத்துக்கு ரயில்வேக்களோ, ஆஸ்பத்திரிகளோ சான்றாகாது. அவை அத்தியாவசியமான ஒரு தீமையாக இருக்கின்றன என்பதுதான் அவை பற்றிக் கூறக்கூடிய சிறப்புரையாகும்" ("யங் இந்தியா", 26.1.1921) புத்தகம் - காந்தியின் தொகுப்புகள், பகுதி - 6)

இதுபோன்ற "அறிவார்ந்த" கருத்துகளைக் கூறிவந்த சிந்தனைக் கடலின் ஒப்பற்ற அறிக்கைகளை, அவருடைய துதிபாடிகள் வேண்டுமானால் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் இவரின் "கருத்துகளும்" "செயல்பாடுகளும்" தான் தாழ்த்தப்பட்ட மக்களின் தீண்டாமையை வேரோடும் வேரடி மண்ணோடும் "பிடுங்கி எறிந்தது" என்ற வரலாற்றுப் பொய்யை நாம் எப்படிச் சகித்துக் கொள்ள முடியும்?

காந்தி, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஏன் போராடவில்லை? என்று எந்த தலித்தும் எந்தக் காலத்திலும் கேள்வி எழுப்பியது இல்லை. அது தேவையும் இல்லை. எம் மக்களின் பிரச்சனைகளுக்குப் போராட எமக்கென்று தலைமை இருக்கிறது. எமது விடுதலைக்காகப் போராடிய எமது ஒப்பற்ற தலைவர்களின் பணிகளை, எம் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, அவர்களிடம் எம் தலைவர்களைப் பற்றிய தவறான புரிதல்களை ஏற்கச் செய்த சாகசங்கள் எல்லாம் வழிநெடுக ஏராளமாகப் பரவிக் கிடக்கின்றன.

பவுத்தம் கோலோச்சிய காலங்களில் இவர்களின் சமூக, பொருளாதார, அரசியல் தர்க்க நிலைகள் வெகுவாகச் சிறப்புற்றிருந்தன என்பதற்கான ஆதாரங்கள் செழுமையாக உள்ளன. பூர்வ பவுத்தர்களான இவர்கள் பார்ப்பனியத்தால் சிதறடிக்கப்பட்டு, திருநிலையற்றவர்களாக, ஊருக்கு ஒதுக்குப்புறமான சேரிகளில் வாழ நிர்பந்திக்கப்பட்டனர். பார்ப்பனியம் வெற்றி பெற்று, இவர்கள் இந்துக்களாக்கப்பட்டனர். மீண்டும் நால்வர்ணப் படிநிலை சமூகம் வந்த பின்பு, இவர்கள் இந்து மதத்தின் பின் இணைப்பாகக் கருதப்படுகின்ற பஞ்சமர்கள் என்ற வர்க்கமாக்கப்பட்டார்கள். அதன் பின்னர் தொடர்ந்து இம்மக்கள் வஞ்சிக்கப்பட்டே வந்தனர்.

1891 ஏப்ரல் 14 அன்று மகாராட்டிரத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த அம்பேத்கர், 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல், சமூக, பொருளாதார விடியலுக்காகத் தன்னை அர்ப்பணித்தார். ஏறத்தாழ 2000 ஆண்டுகளாகத் திட்டமிட்டு ஒடுக்கப்பட்டு வந்த ஒரு சமூகத்தின் விடியலுக்கு, நிரந்தரத் தீர்வை ஆங்கிலேயர்களிடம் போராடிப் பெற்றார். "என் சமூகத்திற்கு விடுதலை கிடைக்க வேண்டும்" என்று உழைத்த அந்தப் புரட்சியாளரின் கனவை, காந்தி என்ற இந்து மத வெறியர் தன் நயவஞ்சகப் போராட்டத்தினால் கிடைக்கவிடாமல் தடுத்தார்.

ஆனால், இன்று தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்விற்காக குள்ளநரி ஒன்று போராடியதாகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் விடியலுக்காக அது உழைத்ததாகவும் இந்திய வரலாறு தலைகீழாக மாற்றித் தவறாக எழுதப்பட்டுள்ளது. அப்படி எழுதப்பட்ட வரலாற்றை உலக மக்களுக்கு இன்றுவரை அது போதித்து வருகிறது. இம்மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, இந்து மதமும், இந்து சனாதனிகளான பார்ப்பனிய - பனியா கும்பல்களும், இந்த மக்களை காந்தியின் விசுவாசிகளாகவும் மாற்றியுள்ளனர்.

இந்து வெறியரான, தலித்தின மக்களின் நயவஞ்சக துரோகியான காந்தி என்பவர், இம்மக்களின் "ஆபத்பாந்தவர் அல்லர்" என்ற வரலாற்று உண்மைகளை காந்தி வாழ்ந்த காலத்திலேயே அம்பலப்படுத்தினார் அம்பேத்கர். இந்தப் பசுத்தோல் போர்த்திய புலி எவ்வாறு தலித் விரோதப் போக்கை தலித் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டது என்பதை அனைத்து மக்களிடமும் ஆய்வுக்குக் கொண்டு செல்லும் நோக்குடனேயே "காந்தியின் தீண்டாமை" என்ற இத்தலைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இது பற்றி ஒரு திறந்த வாசிப்புக்கும், பொது விவாதத்திற்கும் உங்களை அழைக்கிறேன்.


நன்றி: தலித் முரசு

காந்தி என்னும் ஒரு மத வெறியனைப் பற்றிய ஒரு சி(தி)றந்த பார்வை - ஜமுனா
Back to top Go down
Selva
Admin
Admin
Selva


Cancer Posts : 79
Join date : 2010-11-22
Age : 50
Location : Chennai, India

காந்தி - தீண்டாமையின் நவீன வடிவம் Empty
PostSubject: Re: காந்தி - தீண்டாமையின் நவீன வடிவம்   காந்தி - தீண்டாமையின் நவீன வடிவம் EmptySun Nov 28, 2010 10:59 pm

Jammy wrote:
"

காந்தி என்னும் ஒரு மத வெறியனைப் பற்றிய ஒரு சி(தி)றந்த பார்வை - ஜமுனா


பாராட்டுக்கள் ஜமுனா. நிறைய துணிச்சல் வேண்டும். இப்பதிவினை செய்ய.

மிக்க நன்றி

காந்தி - தீண்டாமையின் நவீன வடிவம் Signat11
Back to top Go down
https://tamec.forumotion.com
 
காந்தி - தீண்டாமையின் நவீன வடிவம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» நவீன பாஞ்சாலி

Permissions in this forum:You cannot reply to topics in this forum
Infotainment :: Your first forum-
Jump to: