Infotainment
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Infotainment

Hi Folks, This forum is about Arts, Culture, Entertainment, G K, Music, Cinema, Tamil etc. etc., I dont want to restrict this forum for this alone, as the sky is the limit to discuss
 
HomeHome  PortalPortal  Latest imagesLatest images  SearchSearch  RegisterRegister  Log inLog in  

 

 பாண்டியர் - கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

Go down 
AuthorMessage
Selva
Admin
Admin
Selva


Cancer Posts : 79
Join date : 2010-11-22
Age : 50
Location : Chennai, India

பாண்டியர் - கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து. Empty
PostSubject: பாண்டியர் - கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.   பாண்டியர் - கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து. EmptyFri Nov 26, 2010 12:54 am

கி.பி. 1200ல் பாண்டியரின் ஆட்சியின் பரப்பு

பாண்டியர் - கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து. 200px-Pandya_territories

'அரசமொழிகள் தமிழ்
தலைநகரங்கள்
முதற்சங்கம் - தென்மதுரை
இடைச்சங்கம் - கபாடபுரம்
கடைச்சங்கம் - மதுரை மணவூர்
உபதலைநகரம் - கொற்கை

ஆட்சிமுறை முடியாட்சி

முன்னிருந்த ஆட்சி தகவல் இல்லை

அடுத்து அமைந்த ஆட்சிகள் தில்லி சூல்தான் ஆட்சி, நாயக்கர், விஜயநகர ஆட்சி

பாண்டிய மன்னர்களின் பட்டியல்

முற்காலப் பாண்டியர்கள்
வடிம்பலம்ப நின்ற பாண்டியன்
குடுமி

கடைச்சங்க காலப் பாண்டியர்கள்
முடத்திருமாறன் கி.பி. 50-60
மதிவாணன் கி.பி. 60-85
பெரும்பெயர் வழுதி கி.பி. 90-100
பொற்கைப் பாண்டியன் கி.பி. 100-120
இளம் பெருவழுதி கி.பி. 120-130
அறிவுடை நம்பி கி.பி. 130-145
பூதப் பாண்டியன் கி.பி. 145-160
நெடுஞ்செழியன் கி.பி. 160-200
வெற்றிவேற் செழியன் கி.பி.200-205
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் கி.பி. 205-215
உக்கிரப் பெருவழுதி கி.பி. 216-230
மாறன் வழுதி கி.பி. 120-125
நல்வழுதி கி.பி. 125-130
கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி கி.பி. 130-140
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் கி.பி. 140-150
குறுவழுதி கி.பி.150-160
வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி கி.பி. 160-170
நம்பி நெடுஞ்செழியன் கி.பி. 170-180
இடைக்காலப் பாண்டியர்கள்
கடுங்கோன் கி.பி. 575-600
அவனி சூளாமணி கி.பி. 600-625
செழியன் சேந்தன் கி.பி. 625-640
அரிகேசரி கி.பி. 640-670
ரணதீரன் கி.பி. 670-710
பராங்குசன் கி.பி. 710-765
பராந்தகன் கி.பி. 765-790
இரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790-792
வரகுணன் கி.பி. 792-835
சீவல்லபன் கி.பி. 835-862
வரகுண வர்மன் கி.பி. 862-880
பராந்தகப் பாண்டியன் கி.பி. 880-900
பிற்காலப் பாண்டியர்கள்
மூன்றாம் இராசசிம்மன் கி.பி. 900-945
வீரபாண்டியன் கி.பி. 946-966
அமர புயங்கன் கி.பி. 930-945
சீவல்லப பாண்டியன் கி.பி. 945-955
வீரகேசரி கி.பி. 1065-1070
சடையவர்மன் சீவல்லபன் கி.பி. 1145-1150
பராக்கிரம பாண்டியன் கி.பி.1150-1160
சடையவர்மன் பராந்தக பாண்டியன் கி.பி.1150-1162
மாறவர்மன் சீவல்லபன் கி.பி. 1132-1162
சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1162-1175
சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1175-1180
விக்கிரம பாண்டியன் கி.பி. 1180-1190
முதலாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1190-1218
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1216-1238
இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1238-1250
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1239-1251
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251-1271
இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1251-1281
சடையவர்மன் விக்கிரமன் கி.பி. 1149-1158
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1268-1311
மாறவர்மன் விக்கிரம பாண்டியன் கி.பி. 1268-1281
சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1276-1293
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422-1463
இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1429-1473
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473-1506
குலசேகர தேவன் கி.பி. 1479-1499
சடையவர்மன் சீவல்லப பாண்டியன் கி.பி. 1534-1543
பராக்கிரம குலசேகரன் கி.பி. 1543-1552
நெல்வேலி மாறன் கி.பி. 1552-1564
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564-1604
வரதுங்கப் பாண்டியன் கி.பி. 1588-1612
வரகுணராம பாண்டியன் கி.பி. 1613-1618
கொல்லங்கொண்டான் (தகவல் இல்லை)


பாண்டியர்கள் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவராவர். மற்ற இரு மூவேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர். பாண்டியர்கள் மதுரை, திருநெல்வேலி, மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர்.


பாண்டிய நாடு

இந்து சமுத்திரத்தில் மூழ்கிவிட்டதெனக் கருதப்படும் குமரிக்கண்டத்தில் 72 நாடுகளும் தலைநகராக தென்மதுரையும் விளங்கியது. பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய இத்தென்மதுரை கடற்கோளினால் அழிவுற்றது.இக்கடற்கோளில் அழியாது இருந்து எஞ்சிய நாடுகளின் தலைநகராக கபாடபுரம் விளங்கியது.இரண்டாம் கடற்கோளால் அந்நாடும் அழிவுற்றது.இவ்வழிவின் பின்னர் தற்போதுள்ள மதுரை பாண்டியர்களின் தலைநகராயிற்று. பாண்டிய மன்னர்களால் தமிழ்ச் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது.

பாண்டியரின் தோற்றம்

சேர,சோழர்கள் போன்ற பேரரசுக்களைக் காட்டிலும் மூத்த குடியினர் பாண்டியரே ஆவர்.இவர்களின் தோற்றம் கூற முடியாத அளவிற்குத் தொன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.குமரிக் கண்டத்தில் தோன்றிய ஆதி மனித சந்ததியினரே பாண்டியராக உருப்பெற்றிருக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்து.பாண்டியர்களின் தோற்றத்திற்குச் சான்றாக கி.மு 7000 ஆண்டளவில் உருப்பெற்றதனக் கருதப்படும் தொல்காப்பியத்தில் கூறியபடி


"முன்னீர் விழவின் நெடியோன்

நன்னீர் மணலினும் பலவே"


−(புறம் - 9)

அதாவது குமரிநாடானது முதற் கடற்கோளால் அழிவுற்ற வேளை "அங்கு பஃறுளி ஆற்றை வெட்டுவித்துக் கடல் தெய்வங்களிற்கு விழா எடுத்தவர் பாண்டியர்" என விளக்குகின்றது இப்பாடல் வரிகள்.மேலும் இச்செய்தியைக் கூறும் தொல்காப்பியம் பாண்டிய மன்னர்களால் தலைச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது எனவும் கடைச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது எனவும் பொதுவான கருத்து நிலவுகின்றது.

பாண்டியரைப் பற்றிய பதிவுகள்

இராமாயணத்தில்

பாண்டிய மன்னர்களின் தலைநகர் பொன்முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.முத்து,பொன் அலங்கரித்த கோட்டை வாயில் இருந்தது இவ்வாறு இராமாயணத்தில் உள்ளது.

மகாபாரதத்தில்

திருச்செங்குன்றில் பாண்டவர் படுக்கை உண்டு.திருப்பாண்டி கொடுமுடிதான் விராடநாடு.பாண்டவர் கொடுமுடியின் புறநகரில் வன்னி மரத்தில்தான் ஆடைகளையும் ஆயுதங்களையும் மறைத்து வைத்தனர்.மேலும் அர்ச்சுனன் பாண்டிய மன்னன் ஒருவன் மகளை மணந்தான் எனவும் உள்ளது.

அசோகனின் கல்வெட்டுக்களில்

மகத நாட்டு அரசர்கள் மௌரியர்கள்.மௌரிய அரசன் அசோகன் கல்வெட்டுக்களில் பாண்டிய நாடு பாண்டியர் பற்றிய செய்திகள் உள்ளன.

மகாவம்சத்தில்

இலங்கையை ஆண்ட விஜயன் தனியாட்சி புரிந்தவன் இவன் பாண்டிய மன்னன் ஒருவனின் மகளை மணந்தான்.அப்பாண்டிய மன்னனுக்கு ஆண்டுதோறும் பல பரிசுகளை அனுப்பினான் என்று மகாவம்சம் கூறுகின்றது.

பிற நாட்டவர் பதிவுகள்

கி.மு மூன்றாம் நூற்றாண்டு சந்திரகுப்தன் ஆண்ட காலமான கடைச்சங்க காலத்தின் துவக்கம் 'மெகஸ்தனீஸ்' என்ற யவன நாட்டுத் தூதுவன் பாண்டிய நாட்டிற்கு வந்ததாகக் கருதப்படுகின்றது மேலும் அவனது நாட்டுக் குறிப்பில் பாண்டிய நாடு பற்றி தகவல்கள் பல உள்ளன. கொக்கிளிசுக்குப் 'பண்டேயா' என்ற பெண் பிறந்தாள்.அவளுக்கு கடல்சார்ந்த தென்னாட்டைக் கொடுத்தான்.அதில் 350 ஊர்கள் இருந்தன.நாள்தோறும் அரசிக்கு ஓர் ஊர் மக்கள் திறை செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டான்" என்ற செய்தி யவன நாட்டுத் தூதுவனின் குறிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கி.பி. 9 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் 'பிளைனி' என்ற மேனாட்டான் தமிழகத்தைக் காண வந்தான்.அவனது பயண நூலில் பாண்டிய அரசி பற்றி "இந்தியாவின் தெற்கில் 'பண்டோ' என்ற ஒரு சாதி மக்கள் இருந்தனர்.பெண் அரசு புரியும் நிலை உண்டு.கொக்கிளிசுக்கு ஒரு பெண் பிறந்தாள்.அவளுக்கு அன்போடு பெரிய நாட்டை ஆளும் உரிமை கொடுத்தான்.முந்நூறு ஊர்கள் அவளது ஆட்சியில் இருந்தது.பெருஞ்சேனை வைத்திருந்தாள்.அவளது மரபினர் தொடர்ந்து ஆண்டனர்.என குறித்துள்ளார் பிளைனி.

சங்க காலப் பதிவுகள்

பாண்டியர்கள் சந்திர வம்சத்தைச் சார்ந்தவர்கள் எனவும்.வேப்பம் பூ மாலை அணிந்தவர்கள் எனவும் மீன்கொடியினை உடையவர்கள் எனவும் சங்க கால நூற்குறிப்புகள், கல்வெட்டுக்கள், சாசனங்கள் மற்றும் மெய்க்கீர்த்திகளும் வரலாற்று மூலங்களாக உள்ளன.

இமயம்வரை பாண்டியரின் ஆட்சி

மலையத்துவசப் பாண்டியன் மகள் மீனாட்சி,இவளது திருமணம் மதுரையில் சிவனுடன் நடந்தது. சோமசுந்தரப் பெருமானாக மதுரை தமிழ்ச் சங்கத்தில் இருந்து தமிழ் வளர்த்தார் இவர்.மதுரை மீனாட்சி பெரும்படையோடு இமயம்வரை படையெடுத்து சென்றாள்.இவளது வழிமுறையினரே மௌரியர்கள்.அந்த வழியில் சித்திராங்கதன் வந்தான் என்பதும் அவன் மகளே சித்திராங்கதை என்பதும் குறிப்பிடத்தக்கது.
[தொகு] பாண்டிய நாட்டில் பிற நாட்டவர் ஆட்சி

களப்பிரர் ஆட்சி

வடநாட்டில் பல்லவர்களால் அடித்துவிரட்டப்பட்ட களப்பிரர் கி.பி. (300-600) கன்னட நாடு வழியாக கொங்கு நாட்டிலும்,சேர,சோழ,பாண்டி நாட்டிலும் புகுந்து பாண்டியர்களை அடக்கி ஆண்டனர்.களப்பிரரைத் தொடர்ந்து வந்த பல்லவர் ஆட்சிக்காலமான கி.பி. 600-700 வரையிலும் பாண்டியப் பேரரசு பெரும் வீழ்ச்சியிலிருந்ததாகக் கருதப்படுகின்றது.ஆனாலும் கடுங்கோன் ஆட்சிக் காலத்தில் பாண்டியர் ஆட்சி எழுச்சி பெற்றது.பல்லவர்களின் தாக்கமும் களப்பிரர்களை வீழ்த்தியது. இதன்பின்னர் இடைக்காலப் பாண்டியர் ஆட்சி எழுச்சி பெற்றது.

சோழராட்சி

பாண்டிய நாட்டின் பெரும்பகுதிகள் கி.பி. 1020 முதல் 1070 வரை சோழ மன்னர்களின் ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இராசராசன் மகனான இராசேந்திர சோழனின் மூன்று மகன்களான சுந்தரசோழ பாண்டியன், விக்கிரமசோழ பாண்டியன்,பராக்கிரம பாண்டியன் மூவரும் சோழ பாண்டியர் எனப் பட்டம்பெற்று பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த சோழ மன்னர்களாவர். பாண்டிய நாட்டிற்கு இராசராச மண்டலம் எனப்பெயரிட்டு தங்கள் ஆட்சிக்கு முரண்பட்ட பாண்டியர்களை திறை செலுத்துமாறு உத்தரவு பிறப்பித்தனர்.

மகமதியர் ஆட்சி

மகமதியர் வட நாட்டிலிருந்து தென்னாட்டிற்குப் படையெடுத்து வந்தனர். கோவில்களைக் கொள்ளையடிப்பதனை முக்கிய நோக்கமாகக் கொண்டு படை திரட்டி வந்த கில்ஜி பேரரசின் மன்னன் மாலிக்காபூரிடம் பாண்டிய மன்னனான சுந்தரபாண்டியனால் தன் தம்பியான இரண்டாம் வீரபாண்டியனை வெல்ல உதவியினை நாடினான். இரண்டாம் வீரபாண்டியனை வெற்றி கொண்ட மாலிக்காபூர் சுந்தரபாண்டியனை அடிமைப்படுத்தினான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சயாவுடீன் பார்னி , அமீர்குசுரு, வாசப் போன்றவர்களின் கூற்றுகள் படி மாலிக்காபூர் பாண்டிய நாட்டில் அமைந்திருந்த கோயில்களை இடித்து அங்கிருந்த பொன், பொருள்களைக் கொள்ளையிட்டு சிற்பங்கள் பலவற்றையும் சிதைப்பதற்குக் காரணமானான். மேலும் கொள்ளையிட்ட பொருள்களை டில்லிக்குக் கொண்டு சென்றான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுந்தரபாண்டியன் மற்றும் இரண்டாம் வீரபாண்டியன் போன்றோரிடமிருந்து மாலிக்காபூர் 612 யானைகள், 20,000 குதிரைகள், 96,000 மணங்கு பொன், முத்து மற்றும் அணிகலன்கள் அடங்கிய பெட்டிகளினை எடுத்துச் சென்றான் என பார்னி என்பவன் குறித்துள்ளான். 1830 ஆம் ஆண்டளவில் பாண்டிய நாட்டில் மகமதியர் ஆட்சி நுழைந்தது. டில்லி துக்ளக்கின் அதிகாரியாகத் திகழ்ந்த 'ஜலாலுடீன் அசன்சா' மதுரையினைக் கைப்பற்றி ஆட்சி செய்தான். இவனது ஆட்சிக்குப் பின்னர் அல்லாவுடீன் உடான்றி, குட்புதீன், நாசிருடீன், அடில்ஷா, பஃருடீன் முபாரக் ஷா, அல்லாவுடீன் சிக்கந்தர்ஷா போன்றவர்களின் ஆட்சி மதுரையில் இருந்தது. இவர்கள் தம் பெயர்களினால் நாணயங்கள் வெளியிட்டனர். இவர்களைப் பற்றிய தகவல்கள் புதுக்கோட்டையில் உள்ள இரு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இபின்படூடா என்பவரின் குறிப்பின் படி இம்மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் உள்நாட்டுக் குழப்பங்கள்,கலகங்கள் ஏற்பட்டன. கோயில் வழிபாடு,விழா இன்றி சீரழிந்தன. பாண்டிய நாட்டு மக்கள் துன்புற்றனர். என அவர் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மகமதியர் ஆட்சியின் கீழ் இருந்த பாண்டிய மன்னர்கள்:-
மன்னன் ஆட்சிக்காலம்
மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1314-1346
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1315-1347
மாறவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1334-1380
மாறவர்மன் பரக்கிரம பாண்டியன் கி.பி. 1335-1352

இம்மன்னர்களது கல்வெட்டுகள் பாண்டிய நாடெங்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது மேலும் போசள மன்னனான மூன்றாம் விரவல்லாள தேவனும் போர்க்களத்தில் இறந்தான் இச்செய்தியை விஜயநகர அரசனொருவன் அறிந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராயர்களின் ஆட்சி

பாண்டியர் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த சமயம் வாணாதிராயர்கள் பலர் இருந்தனர். புதுக்கோட்டை கோனாடு இருந்த பொழுது பிள்ளை குலசேகர வாணாதிராயன் ஒருவன் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்தான். இராமநாதபுரத்தில் கேரள சிங்கவள நாடு இருந்தது அங்கு வாணாதிராயன் என்பவன் ஆட்சி செய்தான். இவர்களின் பின்னர் பாண்டியர் ஆட்சி வீழ்ச்சியடையத் தொடங்கியது. ஸ்ரீவல்லிபுத்தூரில் 1453 ஆம் ஆண்டளவில் வரையப்பட்ட கல்வெட்டில் "மகாபலி வாணதரையர் சீர்மையான மதுரை மண்டலம் " எனக் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் மதுராபுரி நாயகன், பாண்டிய குலாந்தகன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 1483 ஆம் ஆண்டளவில் வரையப்பட்ட கல்வெட்டொன்றின்படி மாவலிவாணாதிராயர் பாண்டியருக்குத் திறை செலுத்தினர் எனக்குறிப்பிடும். பாண்டியர் வலிமை குன்றிய வேளை ராயர்கள் மதுரையினை ஆட்சி செய்துள்ளனர். புதுக்கோட்டை குடுமியான் மலைக் கல்வெட்டில் பாண்டியர் ராயரிடம் போரில் தோற்றமை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ராயர்களின் ஆட்சி 17 ஆம் நூற்றாண்டு வரையில் தொடர்ந்தது பாண்டியர்களின் ஆட்சி இக்காலத்தில் இல்லாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

விஜய நகரப் பேரரசாட்சி

கி.பி. 1310 முதல் 1748 ஆம் ஆண்டு வரை தமிழகத்தினை விஜய நகரப் பேரரசு ஆண்டது.நாயக்க மன்னர்கள் அரசியல் அதிகாரிகளாக ஆட்சி புரிந்துள்ளனர்.இவர்கள் ஆட்சிக் காலங்களில் தமிழகத்தில் கோயில்கள்,மண்டபங்கள்,சிற்பக் கூடங்கள்,உலகப் புகழ்பெற்ற சிற்பங்கள் போன்றனவை சிறப்பம்சமாக விளங்கின.சேர,சோழ,பாண்டிய போன்ற பேரரசுகள் விஜய நகரப் பேரரசு காலத்தில் வீழ்ச்சியுற்றிருந்தன. பல பாண்டிய மன்னர்கள் குறுநில மன்னர்களாக இருந்து விஜய நகரப் பேரரசிடம் திறை செலுத்தியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாயக்க மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்த பாண்டிய மன்னர்கள்.

பரக்கிரம பாண்டியன் எனற பெயரில் நாயக்கர் காலத்தில் மூன்று மன்னர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* கி.பி. 1387 ஆம் ஆண்டளவில் பராக்கிரம பாண்டியன் திருக்குற்றாலத்தில் திருப்பணி புரிந்தான்.
* கி.பி. 1384-1415 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்தான் பராக்கிரம பாண்டியன் என்ற பெயருடைய ஒன்னொருவன்.
* கி.பி. 1401-1434 வரை பராக்கிரம பாண்டியன் ஒருவன் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்தான்.
* சடையவர்மன் குலசேகர பாண்டியன் என்ற பெயர்கொண்ட ஒருவன் கி.பி. 1396 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றான் என கரிவலம் வந்த நல்லூர் கல்வெட்டு குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.
* திருப்புத்தூரி, குற்றாலம் ஆகிய ஊர்களில் உள்ள கல்வெட்டுக் குறிப்புகளின் படி கி.பி. 1401 முதல் 1422 வரை சடையவர்மன் விக்கிரம பாண்டியன் என்பவன் பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் அனைவரும் பாண்டிய நாட்டினை ஆண்ட உதிரி அரசர்களாவர். இவர்கள் ஆட்சிக் காலத்து தலைநகரங்கள் மற்றும் இவர்கள் பணிகள் செய்த போர்கள் போன்றவற்றின் தகவல்கள் கிடைக்காததும் குறிப்பிடத்தக்கது.

பாண்டிய நாட்டுக் குறுநில மன்னர்கள்

மானாபரணன்,வீரகேரள பாண்டியன்,சுந்தர பாண்டியன்,விக்கிரம பாண்டியன்,வீரபாண்டியன் ஆகிய ஜந்து மன்னர்களும் பாண்டிய நாட்டில் சோழராட்சி இருந்த சமயம் சோழ மன்னன் இராசாதிராசனால் அடக்கி வைக்கப்பட்டனர். மானாபரணன் மற்றும் வீரகேரளன் ஆகியோர் இராசராசனிடம் போரிட்டுத் தோற்று இறந்தனர். சுந்தர பாண்டியன் போரில் தோற்று முல்லையூரில் ஒளிந்துகொண்டான். விக்கிரம பாண்டியன் ஈழ நாட்டிற்குத் தப்பி ஓடினான். வீரபாண்டியன் கி.பி. 1048 ஆம் ஆண்டளவில் கொல்லப்பட்டான். கோலார் மிண்டிக்கல் கல்வெட்டு மற்றும் இராசாதிராசன் திருக்களச் செப்பேடு போன்றனவற்றில் இத்தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாண்டியர் ஆட்சி இயல்

நாட்டியல்

தமிழகத்தின் தென்பகுதியில் பாண்டிய நாடு அமைந்திருந்தது.மேற்கே சேர நாடும்,மலை நாடும்;கிழக்கே கடல்,வடக்கே சோழ நாடும் ,கொங்கு நாடும்;தெற்கே கடலும் குமரிமுனை இதன் எல்லையாகவும் இருந்தன.இன்றைய மதுரை,திருநெல்வேலி,இராமநாதபுரம்,கன்னியாகுமரி,புதுக்கோட்டை வெள்ளாற்றுக்குத் தெற்குப் பகுதியில் அமையப்பெற்றிருந்தது எனலாம்.சங்க காலத்தில் ஊர்,கூற்றம்,மண்டலம்,நாடு என்ற பிரிவில் அமைந்திருந்தன.


"முந்நூறூர்த்தே தண்பறம்பு நன்னாடு"


−(புறம்-110)


"வல்வேல் சாத்தன் மாய்ந்த பின்றை

முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே"


−(புறம்-242)

என்ற புறப் பாடல்கள் ஊரும்,நாடும் எனக் கூறும். இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்ற தொடர்மொழி அமைப்புச் சான்றாக விளங்குகின்றது. ஊர்கள்,கூற்றங்கள்,வளநாடுகள்,மண்டலம் என்ற அமைப்பில் பிரிக்கப்பட்டிருந்தது.

பாண்டியர் காலத்து நாடுகளும் கூற்றங்களும் ஊர்கள் கூற்றம்,நாடுகளில் அமைந்தன.
இரணிய முட்டநாடு குடநாடு புறப்பறளைநாடு ஆரிநாடு களக்குடி நாடு திருமல்லிநாடு
தென்புறம்புநாடு கருநிலக்குடிநாடு வடபறம்புநாடு அடலையூர்நாடு பொங்கலூர்நாடு திருமலைநாடு
தென்கல்லகநாடு தாழையூர்நாடு செவ்விருக்கைநாடு கீழ்ச்செம்பிநாடு பூங்குடிநாடு விடத்தலைச்செம்பிநாடு
கீரனூர்நாடு வெண்புலநாடு களாந்திருக்கைநாடு பருத்திக் குடிநாடு அளநாடு புறமலை நாடு
துறையூர்நாடு துருமாநாடு வெண்பைக் குடிநாடு இடைக்குளநாடு நெச்சுரநாடு கோட்டூர்நாடு
சூரன்குடிநாடு பாகனூர்க்கூற்றம் ஆசூர்நாடு தும்பூர்க்கூற்றம் ஆண் மாநாடு கீழ்வேம்பநாடு
மேல்வேம்பநாடு தென்வாரிநாடு வடவாரிநாடு குறுமாறைநாடு குறுமலைநாடு முள்ளிநாடு
திருவழுதிநாடு முரப்புநாடு தென்களவழிநாடு வானவன் நாடு கீழ்களக்கூற்றம் கானப்பேர்க்கூற்றம்
கொழுவூர்க்கூற்றம் முத்தூர்க்கூற்றம் மிழலைக்கூற்றம் மதுரோதயவளநாடு வரகுண வள நாடு கேளர சிங்கவளநாடு
திருவழுதி வளநாடு வல்லபவள நாடு பராந்தகவள நாடு அமிதகுண வளநாடு

(நாடும் கூற்றமும் அடங்கியது வளநாடு) பாண்டியர்களின் இயற்பெயரும்,சிறப்புப் பெயரும் வளநாடு பெயராக அமைந்தன.

குடும்ப இயல்

அரசன்,அரசி,இளவரசன்,பட்டத்தரசி என்ற முறையில் குடும்பம் அமைந்தது.பட்டத்தரசி பாண்டிமாதேவி எனப்பட்டாள்.பட்டத்தரசியை அன்றி பிற பெண்களையும் மணந்திருந்தனர் சில பாண்டிய அரசர்கள்.பெண்களும் முடிசூடி ஆட்சி நடத்தியதோடு போரும் செய்திருக்கின்றனர்.அரசனின் மூத்த மகனே பட்டம் பெற முடியும்.இளவரசு பட்டம் பெற இயலும்.மாற்றாந்தாய் மக்களுடன் பகைமை வருதலும் உண்டு.உதாரணமாக வீரபாண்டியன்,சுந்தர பாண்டியன் போன்றவர்களின் வரலாறுகள் இதற்குச் சான்றாகும்.

கொற்கை பாண்டியரது துறைமுகம்.ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஊழ்வினையால்,கண்ணகி நீதி கேட்டதால் இறந்தான்.அச்சமயம் இளவரசனாக கொற்கையில் இருந்த வெற்றுவேற்செழியன் மதுரைக்கு வந்து முடிசூடினான்.ஜந்து பேர் ஒரே சமயத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட நிலையும் இருந்தது.ஆட்சியின் காரணமாக அண்ணன் தம்பி,தந்தை மகன் சண்டைகள் வந்தன மேலும் ஆட்சிக்காக தந்தையை மகன் கொன்ற சம்பவங்களும் பாண்டியரின் குடும்பவியலில் இருந்தன குறிப்பிடத்தக்கது.

அரசியல் ஆட்சி இயல்

பாண்டியரின் ஆட்சிக்கு உற்ற துணையாக இருந்தவர்கள் அமைச்சர்கள்.அடுத்த நிலையில் அரசியல் அதிகாரிகள்,படைத் தலைவர்கள் இருந்தனர்.அரையர்,நாடுவகை செய்வோர்.வரியிலார்,புரவுவரித் திணைக்களத்தார்,திருமுகம் எழுதுவோர் ஆகியவர்களும் அரசனுக்கு ஆட்சியில் துணை செய்தவர்கள் ஆவார்கள்.

1-அரையர் உள்நாட்டுப் பணி புரியும் நாட்டதிகாரிகள் ஆவார்கள்.இவர்கள்,நாட்டைச் சிற்றி வந்து,குடிமக்கள் குறை கேட்டு நீதி வழங்குவர்.

2-நாடுவகை செய்வோர் ஊரில் உள்ள நிலங்களில் அளந்து பணி செய்வர்.

3- வரியிலார் அனைத்து வகையிலும் ஊர் மக்கள் அரசுக்கு வரி செலுத்துவதை கணக்கு வைப்பார்கள்.

4-புரவு வரித்திணைக் களத்தார் வட்டாட்சியர்போல் செயல்படுபவர்கள்.

பாண்டிய வேந்தர்கள் அரசியல் அதிகாரிகளின் பணியைப் பாராட்டி பட்டங்களினையும் அளித்தனர். அவை வருமாறு:-
அரையன் பேரரையன் விசையரையன் தென்னவன் பிரமராயன் தென்வன் தமிழவேள் காவிரி
ஏனாதி பஞ்சவன் மாராயன் பாண்டிய மூவேந்தவேளான் செழிய தரையன் பாண்டிப் பல்லவதரையன் தொண்டைமான்
பாண்டிய கொங்கராயன் மாதவராயன் வத்தவராயன் குருகுலராயன் காலிங்கராயன்

காவிரி,ஏனாதி பட்டம் பெற்றவர்களுக்கு பொற்பூ,மோதிரம்,இறையிலி நிலம் அளித்துக் கௌரவிப்பது பாண்டியர்களின் வழக்கமாகும்.

அரசின் வரி

பாண்டியர் காலத்தில் வரியை இறை என்றழைத்தனர்.இறை பெறுதல்முறை என்பது வழக்கத்திலிருந்துவந்தது.குடிகள் அரசனுக்கு நிலவரி கொடுத்தனர்.விளைநெல்,காசு,பொன் வரியாகக் கொடுத்தனர்.ஊர்த் தலைவர்கள் மக்களிடம் பெற்று அரசிடம் அளித்தனர்.தளியிறை,செக்கிறை,தட்டார்ப் பட்டம்,இடைவரி சான்று வரி,பாடிகாவல்,மனையிறை,உல்கு முதலான வரி முறைகள் இருந்தன.இறை,பாட்டம் என்பன வரியினை உணர்த்தும் சொற்களாகத் திகழ்ந்தன.தட்டார்ப் பாட்டம் கம்மாளரின் வரியாகும்.நாடு காவலையே பாடி காவல் என்றழைக்கப்பெற்றது.ஊர்க்காவலிற்கு வாங்கிய வரியே இப்பெயர்பெற்றது.பாண்டிய அரசர்களுள் சில அரசர்களும் ஊர்க்காவலிற்குச் சென்றனர்.பொற்கைப்பாண்டியன் இதற்குச் சான்றாக விளங்குகின்றான்.வீட்டு வரியினை மனை இறை என்றழைத்தனர்.கலத்தினும்,காலினும் வரும் பொருள்களுக்கு வாங்கும் வரியே சுங்க வரி எனப்படும்.உல்குவின் பொருள் இதுவேயாகும்.

நில அளவியல்

ஊர்தோறும் உள்ள நிலங்களை அளந்து வரி விதிக்கப்பட்டது.பாண்டிய நாடு முழுவதும் அளக்கப்பட்டது.நாடு வகை செய்வோர் அளந்தனர்.நிலத்தினை அளக்கும் கோல் 'சுந்தர பாண்டியன் கோல்' என்ற பெயரைக் கொண்டிருந்தது. 24 அடி கொண்ட தடியாகும் இக்கோல்.குடிதாங்கிக் கோலும் அளவு கோலாக புழக்கத்தில் இருந்தது.நிலங்களை குழி,மா,வேலி என்று பெயரிட்டு அளந்தனர்.அளந்த நிலத்திற்கு எல்லைக் கல் நாட்டனர்.இக்கற்களே புள்ளடிக் கற்களாகும்.சிவன் கோயில்களிற்கு இடப்பட்ட நிலத்திற்கு திரிசூலக்கல் நடப்பட்டது.திருமால் கோயிலுக்கு இடப்பட்ட நிலத்திற்கு திருவாழிக்கல் நடப்பட்டது.நீர் நிலம் நன்செய் எனவும் மேட்டு நிலம் புன்செய் என அழைக்கப்பட்டது.நத்தம்,தோட்டம் என்ற வழக்கும் புழக்கத்தில் இருந்தது.

இறையிலி

இறைவன் கோயிலுக்கு அளிக்கப்படும் கொடை இறையிலி என அழைக்கப்பட்டது.சிவன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலி தேவதானம் என அழைக்கப்பெற்று திருமால் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலிக்கு திருவிடையாட்டம் என்று பெயர்.சைன,பௌத்த கோயில்களுக்கு அளிக்கப்பட்ட கொடை பள்ளிச்சந்தம் என அழைக்கப்பட்டது.அந்தணர்களுக்கு வழங்கப்பட்டது பிரமதேயம்;பட்டவிருத்தி எனவும்,மடங்களுக்கு வழங்கப்பட்டது மடப்புறம் எனவும் புலவர்களுக்கு முற்றூட்டும்,சோதிடர்களுக்கு கணிமுற்றூட்டும் எனவும் கொடைகள் அழைக்கப்பட்டன.

அளவை இயல்

எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல் ஆகிய நான்கு அளவைகள் பாண்டியர் ஆட்சியிக் காலங்களில் புழக்கத்தில் இருந்து வந்திருக்கின்றன.எடுத்தல் என்பது நிறுத்தல் ஆகும்.பொன்,வெள்ளி,கழஞ்சு,காணம் ஆகிய நிறை கற்களால் நிறுத்தனர்,சர்க்கரை,காய்கறிகள்,புளி ஆகியவற்றை துலாம்,பலம் என்பவற்றால் நிறுத்தனர்.சேர் ,மற்றும் மணங்காலும் நிறுக்கப்பட்டன.நெல்,அரிசி,உப்பு,நெய்,பால்,தயிர்,மிளகு,சீரகம்,கடுகு ஆகியன செவிடு,ஆழாக்கு,உழக்கு, உரி,நாழி, குறுணி போன்ற முகக்கும் கருவிகளால் அளக்கப்பட்டன்.

எடுத்தல் அளவை

* 10 கர்ணம் - 1 கழஞ்சு
* 100 பலம் - 1 துலாம்

முகத்தல் அளவை

* 5 செவிடு - ஒரு ஆழாக்கு
* 2 ஆழாக்கு - ஒரு உழக்கு
* 2 உழக்கு - ஒரு உரி
* 2 உரி - ஒரு நாழி
* 6 நாழி - ஒரு குறுணி
* 16 குறுணி - ஒரு கலம்

இவ்வாறான அளவு முறைகள் பாண்டிய நாட்டில் இருந்தன,சங்க காலம் முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை இவ்வளவு முறை புழக்கத்தில் இருந்திருக்கின்றது.14 ஆம் நூற்றாண்டு முதல் புதிய அளவு முறைகள் வந்தன குறிப்பிடத்தக்கது.

நாணய இயல்

பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் மன்னர்களின் பெயராலும்,சிறப்புப் பெயராலும் நாணயங்கள் வெளியிடப்பட்டன. பொன்,செம்பால் செய்யபட்ட காசுகள் புழக்கத்தில் இருந்தன.மீன் சின்னம் பொருத்தப் பட்டதாக வெளியிடப்பட்டது பாண்டியர் ஆட்சிக் கால நாணயங்கள்.

சீமாறன் சீவல்லபவன் - அவனிப சேகரன் கோளலிக என்ற பெயரில் நாணயம் வெளியிட்டான்.இதற்குச் சான்றாக சிற்றண்ண வாசல் கல்வெட்டு விளங்குகின்றது.முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் சோணாடு கொண்டான் நாணயம் வெளியிட்டான் சீவல்லபன் "அவனிப சேகரன் கோளகை" என்ற பெயரில் வெளியிட்டான்.1253 ஆம் ஆண்டில் வீரபாண்டியன் "வாளால் வழி திறந்தான் குளிகை" என்ற பெயரில் நாணயத்தினை வெளியிட்டான்.காசு என்பது ஒரு கழஞ்சு எடை உடையது 10 பொன் கொண்டது ஒரு காசு 10 காணம் - 1 கழஞ்சு ஒரு காணம் 4 குன்றி 'காசும் பொன்னும் கலந்து தூவியும்' என்ற தொடர் இதனை உணர்த்துகின்றது.காணம்,கழஞ்சு,காசு,பொன் புறத்திலே வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஊரவை

பாண்டியர் ஆட்சியில் ஊர் தோறும் ஊரவை இருந்துவந்தது.ஊராட்சியினை இது செயல்பட வைத்தது.குடவோலை முறையில் ஊர்த் தலைவரை தேர்ந்தெடுத்தனர்.சிற்றூர் பல சேர்ந்து கிராம சபை அமைத்தனர்.நிலமும், கல்வியும், மனையும்,அறநெறியும் உடையவர்கள் மட்டுமே ஊரவை உறுப்பினர்களாக முடுயும்.ஊர்களிற்குப் பொது மன்றங்கள் இருந்தன.அரசு அதிகாரிகளின் மேற்பார்வையில் ஊரவை நடைபெற்றது.நீதி விசாரணைக்கு ஊரவையில் உட்கழகங்கள் இருந்தன.வாரியங்கள் என்ற பெயரில் இவை அமைந்தன. அவை பின்வருமாறு:-

* சம்வற் சரவாரியம் - நீதி வழங்கும்,அறநிலையங்களை கண்காணிக்கும்.
* ஏரிசவாரியம் - நீர் நிலை,பாசனம் கண்காணிப்பது.
* தோட்ட வாரியம் - நிலங்களை அளப்பது,கண் காணிப்பது.
* பொன் வாரியம் - நாணயங்களை வெளியிடுவது,கொடுப்பது.
* பஞ்சவாரியம் - குடிமக்களிடம் வரிபெற்று அரசுக்கு அளிக்கப்படுவது.

அவை உறுப்பினர் பெருமக்கள்,ஆளுங்கணக்கர் என்றழைக்கப்பட்டனர்.இவர்கள் ஓராண்டு ஊதியமின்றி பணிபுரிவர்.ஊர் மன்றங்களிலும்,கோயில் மண்டபங்களிலும் ஊரவை கூடும்.புதிய விதிகளை அமைக்கும் உரிமை ஊரவைக்கு இருந்தது. மருதனிள நாகனார்,


"கயிறு பிணிக் குழிசியோலை கொண்டமர்

பொறிகண்டழிக்கு மாவணமாக்களின்"


−(அகம் - 77)

என்று (அகம்-77) அகப்பாட்டில் கூறியுள்ளார்.இவ்வரிகளில் கூறியபடி பாண்டியர் காலத்தில் குடவோலை முறை இருந்தது என்பதனை அறியலாம்.நெல்லையில் மானூரில் கல்வெட்டு ஊரவை உறுப்பினரின் தகுதி பற்றி குறித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆவணக்களரி இயல்

பதிவு அலுவலகம் பாண்டியர் காலத்தில் ஆவணக்களரி என்றழைக்கப்பட்டது.ஒவ்வோர் ஊரிலும் எழுதப்பட்ட ஆவணங்களைக் காப்பிட ஆவணக்களரி இருந்தது.இதனை ஆவணக்களம் என்றழைத்து வந்திருக்கின்றனர். இப்பகுதிக்குப் பொதுவாக நிலம் விற்போர் வாங்குவோர் சென்று தம் நிலத்திற்கு உரிய விலை,பரப்பு,நான்கெல்லை குறிக்கப்படும்.விற்போர் உடன்பட்டு உறுதிமொழியில் கையொப்பம் இடவேண்டும்,ஆவணங்களை கோவில் சுவரில் பொறித்து வைப்பதும் உண்டு.ஆவணக்களரி மக்களின் உரிமைக்கும்,சொத்துக்கும் பாதுகாப்புத் தருவதாக அமைந்திருந்தன.மக்கள் பயன்கருதி பாண்டியர் ஆட்சி நடைபெற்ற அனைத்து ஊர்களிலும் இது செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

படை இயல்

யானைப்படை,குதிரைப்படை,காலாட்படை,தேர்ப்படை போன்ற நால்வகைப் படைகளினையும் வைத்திருந்தனர் பாண்டியர்.கொற்கை,தொண்டி துறைமுகங்களில் வெளிநாட்டுக் குதிரைகள் ஆண்டுதோறும் வந்திறங்கியது.ஆண்டுக்கு பதினாராயிரம் குதிரைகள் வந்தன என 'வாசப்' கூறியுள்ளான்,மார்க்கோபோலோ "குதிரைகள் வாங்க மிகுதியான பொருளைச் செலவிடுகின்றனர்" என்று பாண்டியர்களைப் பற்றிக் குறித்துள்ளார்.வாட்போர்வல்ல பெரிய காலாட்படை இருந்தது பாண்டியர் ஆட்சிக்காலத்தில்."பெரும் படையோம்"எனக் கையெழுத்திடும் குழு பாண்டி நாட்டில் இருந்தது.'முனையெதிர் மோகர்' 'தென்னவன் ஆபத்துதவிகள்' போன்ற படைகளும் இருந்தன என கல்வெட்டுக்களில் குறிப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

"கடி மதில் வாயிற் காவலிற் சிறந்த அடல்வாள் யவணர்"

சிலப்பதிகாரத்தில் வரும் இப்பாடல் வரியிலிருந்து உரோமாபுரிப் போர்ப் படை வீரர்கள் மதுரைக் கோட்டையைக் காத்திருந்தனர் என்று கூறுவதற்கிணைய அத்தகு வலிமையுடன் சிறப்புற்றிருந்தது பாண்டியர் படை என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகவியலும் தொழிலியலும்

* பாண்டிய நாட்டில் கடைச்சங்க நாளிலேயே வணிகமும் தொழிலும் மிகச்சிறப்பாக இருந்தன.மதுரை,கொற்கை முதலான நகரங்களில் கிடைத்துள்ள உரோமாபுரி நாணயங்களே இதற்குச் சான்றாகும்.
* வெளிநாட்டு வணிகங்கள் சிறப்புற்றும் உள்நாட்டில் பண்டங்களை எடுத்துச் செல்வதற்கேற்ற பெருவழித் தடங்களும் இருந்தன.நாடு முழுதும் இச்சாலைகள் அமைந்திருந்தன.
* வணிகர்கள் கோவேறு கழுதை,மாட்டு வண்டிகளில் பண்டங்களை ஏற்றிச் சென்றனர்.வழியில் களவு போகாமல் இருக்க காவற்படைகள் இருந்தன.வணிகர்கள் கூட்டமாகச் செல்வதனை வணிகச்சாத்து என அழைத்தனர்.வணிகரில் சிறந்தோர் 'எட்டி' என்றழைக்கப்பட்டனர்.
* பாண்டி நாட்டு கொற்கைப் பெருந்துறையில் முத்துக்களும்,சங்குகளும் பெருவாரியாகக் கிடைத்தன.கொற்கை முத்து உலகெங்கும் சென்றதும் குறிப்பிடத்தக்கது.இதற்குச் சான்றாக



"மறப்போர் பாண்டியர் அறத்திற் காக்கும்

கொற்கையம் பெருந்துறை முத்து"


−(அகம்-27)


"பாண்டியன் - புகழ்மலி சிறப்பில் கொற்கை முன்துறை

அவர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து"


−(அகம்-201)

இவ்விரு அகநானூற்றுப் பாடல்களும் கொற்கை முத்து பற்றிக் கூறுகின்றன.மேலும் மதுரைக்காஞ்சி,சிறுபாணாற்றுப்படை,சிலப்பதிகாரம் ஆகிய நூல்களிலும் இவ்வகைச்செய்திகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Back to top Go down
https://tamec.forumotion.com
 
பாண்டியர் - கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» சோழர் கலை - கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
» சேரர் - விக்கிபீடியாவில் இருந்து.
» பல்லவர் - விக்கிபீடியாவில் இருந்து

Permissions in this forum:You cannot reply to topics in this forum
Infotainment :: Your first forum-
Jump to: